எதிர்வரும் பண்டிகைக் காலத்தை முன்னிட்டு, சமூக ஊடகங்களைப் பயன்படுத்தும் போதும், அறிமுகமில்லாத நபர்களிடமிருந்து வரும் செய்திகள் அல்லது அழைப்புகளுக்குப் பதிலளிக்கும் போதும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்குமாறு இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழு (TRCSL) அறிவுறுத்தியுள்ளது.
இக்காலப்பகுதியில் தனிப்பட்ட தகவல்கள், கடவுச்சொற்கள் அல்லது ஒருமுறை பயன்படுத்தும் கடவுச்சொற்களை (OTP) பெற்றுக்கொள்ளும் மோசடி முயற்சிகள் அதிகரிக்கக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
அண்மைக்காலமாக பொதுமக்களிடமிருந்து கடன் அட்டை (Credit Card) விபரங்களைப் பெற்றுக்கொள்ள மோசடி செய்பவர்கள் முயற்சிப்பதாக இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழுவின் தகவல் பாதுகாப்பு பொறியியலாளர் ஷாருகா தமுனுபொல தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
மோசடி செய்பவர்கள் பெரும்பாலும் வங்கிகள் அல்லது விமான நிறுவனங்களின் பிரதிநிதிகள் போல நடித்து, சமூக ஊடகங்கள் ஊடாக அசாதாரணமான அதிக தள்ளுபடிகளை வழங்கி பொருட்களை விற்க முயற்சிப்பார்கள்.
இவ்வாறான சந்தர்ப்பங்களில் பொதுமக்கள் பீதியடைய வேண்டாம். உத்தியோகபூர்வ வழிகள் ஊடாக சம்பந்தப்பட்ட வங்கி அல்லது விமான நிறுவனத்தைத் தொடர்பு கொண்டு தகவல்களை உறுதிப்படுத்திக்கொள்ளவும். சந்தேகம் ஏற்பட்டால் பொலிஸாருக்கு அறிவிக்கவும்.
இவ்வாறான மோசடிகள் தொடர்பாக மாதந்தோறும் 150 முதல் 200 முறைப்பாகள் தங்களுக்குக் கிடைக்கின்றன. பண்டிகைக் காலத்தையொட்டி எதிர்வரும் வாரங்களில் இந்த எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும்.
இந்த முறைப்பாடுகளில் இணையவழி மோசடிகள் மற்றும் போலி முதலீட்டுத் திட்டங்கள் ஆகியவை இதில் அடங்கும்.
பல மோசடிகள் பயனர்களை ஏமாற்றுவதற்காக உண்மையான நிறுவனங்களின் இலச்சினைகள் மற்றும் வடிவமைப்புகளைப் பிரதிபலிக்கும் போலி வலைத்தளங்கள் ஊடாகவே மேற்கொள்ளப்படுகின்றன.
இவ்வாறான சம்பவங்களின் போது இலங்கைத் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணைகுழு தொழில்நுட்ப ரீதியான ஆதரவை வழங்க முடியும் என்றாலும், சட்ட நடவடிக்கைகளை பொலிஸாரே எடுக்க வேண்டும் என்றார்.













