
தொழிற்சங்கங்கள் முன்னெடுத்து வரும் பணிப்பகிஷ்கரிப்பு நடவடிக்கையால் கொழும்பு 09, கொழும்பு 14 மற்றும் கம்பஹா மாவட்டத்தின் பல பகுதிகளில் ஏற்பட்டுள்ள மின்சாரத் தடைகளை சீரமைப்பதில் தாமதம் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கை மின்சார சபையின் (CEB) மறுசீரமைப்பைத் தொடர்ந்து புதிதாக உருவாக்கப்பட்ட நிறுவனங்களுக்கு ஊழியர்களை நியமிக்கும் போது முறையான நியமனக் கடிதங்கள் வழங்கப்படாதது உள்ளிட்ட எட்டு கோரிக்கைகளை முன்வைத்து, ஊழியர்கள் திங்கட்கிழமை (09) பிற்பகல் 3.00 மணி முதல் தொழிற்சங்க நடவடிக்கையை ஆரம்பித்துள்ளதாக தொழிற்சங்கங்கள் தெரிவித்துள்ளன.
இலங்கை மின்சார சபையின் தேசிய ஊழியர் சங்கத்தின் தகவலின்படி, இந்த பணிப்பகிஷ்கரிப்பு 24 மணிநேரத்திற்கு முன்னெடுக்கப்படுகிறது.
இந்நிலையில், தங்களின் கோரிக்கைகளுக்கு தீர்வு வழங்கப்படாவிட்டால் தொழிற்சங்க நடவடிக்கையை மேலும் தீவிரப்படுத்துவோம் என இலங்கை மின்சார சபை தொழில்நுட்ப பொறியாளர்கள் சங்கத்தின் தலைவர் கோசல அபேசிங்க தெரிவித்துள்ளார்.
எனினும், இலங்கை மின்சார சபையை புதிதாக நிறுவப்பட்ட நிறுவனங்களின் கீழ் மாற்றும் நடவடிக்கை ஊழியர்களின் உரிமைகள் மற்றும் சலுகைகளுக்கு எந்தவித பாதிப்பையும் ஏற்படுத்தாது என, அந்த மாற்று பணிக்குழுவின் தலைவர் புபுது நிரோஷன் ஹெடிகல்ல தெரிவித்துள்ளார்.












.webp)