எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை அதிகரிப்பு - அரசாங்கம்



உலக சந்தையில் மசகு எண்ணெயை விலை சடுதியாக அதிகரித்துள்ள நிலையில், உள்நாட்டில் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுப்பதற்காகவே விலை அதிகரிப்பு மேற்கொள்ளப்பட்டது. மக்களின் நலன் கருதி மிகக் குறைந்த அளவிலேயே விலையேற்றம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சரவைப் பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

சர்வதேச சந்தையில் எரிபொருள் விலை 36 சதவீதத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ள பின்னணியில், இலங்கையிலும் எரிபொருள் விலையை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட அவர், தனியார் நிறுவனங்கள் இறக்குமதியை நிறுத்தும் அபாயம் மற்றும் உலக சந்தை நிலைவரங்களைக் கருத்திற்கொண்டு, விலை சூத்திரத்தின் அடிப்படையில் இந்த மாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டினார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (10) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அமைச்சரவை பேச்சாளர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் மாத்திரம் எரிபொருள் விலை அதிகரிக்கப்படவில்லை. பல்வேறு நாடுகள் எரிபொருள் விலைகளை அதிகரித்ததோடு மாத்திரமின்றி வலுசக்தி பயன்பாட்டை குறைப்பதற்கான நடவடிக்கைகளைக் கூட முன்னெடுத்துள்ளன. பங்களாதேஷில் பல்கலைக்கழகங்கள் மூடப்பட்டுள்ளன. சில நாடுகளில் 90 சதவீதம் வரை எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. பெப்ரவரி 27ஆம் திகதி உலக சந்தையில் 72 டொலராகக் காணப்பட்ட மசகு எண்ணெய் விலை மார்ச் 8ஆம் திகதியன்று 108 டொலர் வரையும், 9ஆம் திகதி 119 டொலர் வரையும் உயர்வடைந்துள்ளது.

அந்த வகையில் உலக சந்தையின் மசகு எண்ணெய்யின் விலை 36 சதவீதத்தால் அதிகரிப்பைக் காண்பிக்கிறது. இதேபோன்று சுத்தீகரிக்கப்பட்ட எரிபொருட்களின் விலைகளும் அதிகரிக்கப்பட்டுள்ளன. எரிபொருட்கள் முற்பதிவு செய்யப்படும் போது, அவை நாட்டை வந்தடைவதற்கு இரண்டு அல்லது மூன்று தினங்களுக்கு முன்னர் காணப்படும் விலையை அடிப்படையாகக் கொண்டே இறுதி விலை தீர்மானிக்கப்படும். உலக சந்தையின் விலை உயர்விற்கமைய நாமும் எரிபொருள் விலையை அதிகரிக்காவிட்டால், நாட்டிலுள்ள தனியார் எரிபொருள் விநியோக நிறுவனங்கள் இறக்குமதியை நிறுத்தும் அபாயம் காணப்படுகிறது.

அவ்வாறு தனியார் நிறுவனங்கள் எரிபொருள் விநியோகத்தை நிறுத்தினாலோ அல்லது குறைத்தாலோ விநியோகத்தில் சிக்கல் ஏற்படும். அது மாத்திரமின்றி கடந்த வாரங்களில் எரிபொருள் பாவனையானது வழமைக்கு மாறான அதிகரிப்பை பதிவு செய்துள்ளது. வழமையாக நாளொன்று டீசல் சுமார் 4000 மெட்ரிக் தொன் அளவிலேயே பயன்படுத்தப்படும். ஆனால் மார்ச் 1 - 9 வரை டீசல் பாவனை 59 200 மெட்ரின் தொன் லீற்றராகப் பதிவாகியுள்ளது. இதேபோன்று பெற்றோல் உள்ளிட்ட ஏனைய எரிபொருட்களின் பாவனையும் சடுதியாக அதிகரித்துள்ளது. அதற்கமைய கடந்த தினங்களில் எரிபொருட்களின் விலைகள் 13 000 - 23 000 மெட்ரின் தொன் லீற்றரால் அதிகரித்துள்ளது.

எனவே இருப்பில் காணப்பட்ட எரிபொருட்கள் நிறைவடைந்ததோடு, புதிய கப்பல்களில் இறக்குமதி செய்யப்பட்ட எரிபொருட்கள் அதிகரிக்கப்பட்ட விலையிலேயே கொள்வனவு செய்யப்பட்டது. அந்த வகையில் இதை விட அதிக விலை அதிகரிப்பு நடைமுறைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். எனினும் மக்களின் நலன்கருதி சிறியளவிலான விலை அதிகரிப்பே நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. விலை அதிகரிப்பினால் எரிபொருட்களின் பாவனையை மக்கள் வரையறுத்துக் கொள்வர் என்றும் எதிர்பார்க்கின்றோம். உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பை கவனத்தில் கொண்டு, நிதி அமைச்சுடன் இணைந்து குறுகிய காலத்துக்கு நிவாரணம் வழங்குவது குறித்தும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

உலக நாடுகளின் போர் நிலைவரம் தொடர்பில் எவ்வித எதிர்வுகூறல்களையும் கூற முடியாது என்பதால், இனிவரும் நாட்களில் எரிபொருட்களின் விலை திருத்தங்கள் தொடர்பிலும் தற்போது ஸ்திரமாக எதையும் கூற முடியாது. வழமையான விலை சூத்திரத்துக்கமையவே இம்முறையும் விலைத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றார்.