அடுத்த இரு வாரங்களில் நீர் விநியோகம் மட்டுப்படுத்தப்படலாம் - தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை !



நாட்டில் தற்போது நிலவும் வறட்சியான வானிலை காரணமாக எதிர்வரும் வாரங்களில் நீர் விநியோகக் கட்டுப்பாடுகளை அமுல்படுத்த வேண்டிய நிலை ஏற்படும் என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் பொறியியலாளர் சந்தன பண்டார தெரிவித்துள்ளார்.

தற்போதைய நிலையில், முறையான நீர் வெட்டு எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்றும், இருப்பினும் நிலவும் வானிலை மாற்றங்களால் நாள் முழுவதும் தடையின்றி நீர் வழங்குவது சவாலாக இருக்கும் என்றும் குறிப்பிட்டார்.

அம்பத்தலே உள்ளிட்ட பிரதான நீர் சுத்திகரிப்பு நிலையங்களின் உற்பத்தித் திறனில் இதுவரை பாதிப்பு ஏற்படவில்லை. எவ்வாறாயினும், உயர்நிலப் பகுதிகளுக்கு நீர் விநியோகிப்பதில் தற்போது குறைந்த அழுத்த நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, தற்போதைய நீர் இருப்பை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்துமாறு பொதுமக்களை அவர் கேட்டுக்கொண்டுள்ளார். மேலும், எதிர்வரும் நாட்களில் மழை வீழ்ச்சியை எதிர்பார்ப்பதாகவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.

குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் பகுதிகளுக்கு, தற்போது நீர் பௌசர்கள் மூலம் விநியோக நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாகவும் தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் தலைவர் சந்தன பண்டார மேலும் தெரிவித்தார்.