
தொழில்நுட்ப இடைவெளியும் சமத்துவமற்ற கல்வியும்
கல்வி என்பது ஒரு வற்றாநதி என்பதுடன் அது ஒரு சமூகத்தின் முன்னேற்றத்திற்கான திறவுகோல். அது அனைவருக்கும் பொதுவானதாக இருக்க வேண்டும். ஆனால் இன்று தொழில்நுட்ப இடைவெளி (Digital divide ) பெருஞ்சுவர் இந்த நதியின் போக்கை திசை மாற்றி விடுகிறது. ஒருபுறம் அதிவேக இணையமும் நவீன மடி கணினிகளும் கொண்டு உலகத்தை உள்ளங்கையில் வைத்திருக்கும் மாணவர்கள் .மறுபுறம் ஒரு சிறு அலை பேசி திரைக்காகவோ அல்லது சிக்னல் கிடைக்காமல் மலை உச்சிகளிலும் மரத்தடிகளிலும் தவம் கிடக்கும் விளிம்பு நிலை மாணவர்கள்.
இந்த சூழலில் தொழில்நுட்ப வசதி உள்ளவர்களுக்கும் இல்லாதவர்களுக்கும் இடையே உருவாகியுள்ள மிகப்பெரிய இடைவெளியே " தொழில்நுட்ப இடைவெளி " ஆகும். இது கல்வியில் ஒரு புதிய வகை தீண்டாமையை அல்லது சமத்துவமின்மையை உருவாக்கிய வண்ணம் உள்ளது.
தொழில்நுட்ப இடைவெளி (Digital divide )மற்றும் சமத்துவமற்ற கல்வி (Educational Inequality )ஆகிய இரண்டும் இன்றைய நவீன உலகில் மிக முக்கியமான சவால்களாக உருவெடுத்துள்ளன. இவை இரண்டும் ஒன்றோடு ஒன்று பின்னிப்பிணைந்தவை.
தொழில்நுட்பம் கல்வியை எளிதாக்கினாலும் அது அனைவருக்கும் சமமாக கிடைக்காத போது சமூகத்தில் ஒரு பெரிய பிளவை ஏற்படுத்துகிறது எனலாம்.
தொழி நுட்ப இடைவெளி என்பது நவீன தகவல் மற்றும் தொடர்பு தொழில் நுட்பங்களை அணுகக் கூடியவர்களுக்கும் அந்த வசதி இல்லாதவர்களுக்கும் இடையே காணப்படும் பொருளாதார மற்றும் சமூக சமத்துவமின்மையை குறிக்கின்றது.
இது வெறுமனே கணினி வைத்திருப்பதைப் பற்றியது மட்டுமல்ல இணைய வேகம், டிஜிட்டல் அறிவு மற்றும் அந்த தொழில்நுட்பத்தை ஆக்கபூர்வமாக பயன்படுத்தும் திறன் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கியது.
கல்வித்துறையில் தொழில்நுட்ப இடைவெளி மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இன்றைய சூழலில் கல்வி என்பது வகுப்பறைகளை தாண்டி இணைய தளங்கள் மற்றும் செயலிகளுக்கு நகர்ந்துவிட்டது. இதில் சமநிலை இல்லாத போது பின்வரும் சிக்கல்கள் ஏற்படுகின்றன.
அதாவது இணைய வசதி உள்ள மாணவர்கள் உலகளாவிய தரவுகளை நொடியில் இலகுவாகப் பெறுகிறார்கள் .வசதி இல்லாத மாணவர்கள் பாடப் புத்தகங்களை மட்டுமே நம்பி இருக்க வேண்டியுள்ளது. நிகழ்நிலை வகுப்புக்கள் கல்விசார் காணொளிகள் போன்றவை வசதி படைத்த மாணவர்களுக்கு கூடுதல் பலத்தை தருகின்றன.
தொழில்நுட்பத்தை பயன்படுத்தி பழகிய மாணவர்கள் எதிர்கால வேலை வாய்ப்புகளுக்கு தேவையான கணினி திறன்களை இயல்பாகவே வளர்த்துக் கொள்கிறார்கள். மற்றவர்கள் இதில் பின் தங்குகிறார்கள். எடுத்துக்காட்டாக, ஒரு மாணவர் தனியார் பாடசாலையில் படிக்கிறார். வீட்டில் Wi - Fi வசதி மற்றும் மடிக்கணினி உள்ளது. பாடசாலையில் வகுப்புக்கள் நடக்கின்றன ஆசிரியரிடம் உடனுக்குடன் சந்தேகங்களை கேட்டு தெளிவு பெறுகின்றார். அவருடைய கற்றல் தடைப்படாமல் தொடர்கிறது. அதே சமயம் இன்னொரு மாணவர் அரசாங்க பாடசாலையில் படிக்கிறார். இவரிடம் ஸ்மார்ட் போன் இல்லை அல்லது இருந்தாலும் இணைய வேகம் மிக குறைவாக உள்ளது. மின்சார தட்டுப்பாடும் ஒரு காரணி. பாடசாலைகள் மூடப்பட்டால் இவருக்கு கல்வி கிடைப்பதில் நீண்ட இடைவெளி ஏற்படுகின்றது .இந்த இரு மாணவர்களுக்கு இடையே ஏற்படும் அறிவு மற்றும் வாய்ப்பு சார்ந்த இடைவெளி தான் "தொழில்நுட்ப இடைவெளி " .இது எதிர்காலத்தில் அவர்களின் வேலை வாய்ப்பு மற்றும் பொருளாதார நிலையை தீர்மானிக்கும் காரணியாக மாறுகிறது என்று கூறலாம்.
இவ்வாறான இடைவெளியை குறைக்க அனைத்து மாணவர்களுக்கும் மடிக்கணினி வழங்குதல், கிராமப்புறங்களில் இலவச அல்லது குறைந்த விலையில் அதிவேக இணைய சேவை , ஆசிரியர்களுக்கு டிஜிட்டல் முறையில் கற்பிக்கும் பயிற்சி அளிக்கப்பட வேண்டும். மேலும் தொழில்நுட்ப இடைவெளியும் சமத்துவமற்ற கல்வியும் சமூக பொருளாதார பின்னணி ,பாலினம், மொழி போன்றவற்றிலும் மாற்றுத் திறனாளிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. அதாவது வருமானம் மற்றும் அல்லது அந்தஸ்து ஒரு நபர் தரமான தொழில்நுட்பத்தை பெறுவதை தீர்மானிக்கின்றது.
செல்வந்தர் வீட்டுப் பிள்ளைகள் அதிவேக இணைய மற்றும் நவீன கருவிகளை பயன்படுத்துகின்றனர். ஏழை எளிய வீட்டுப் பிள்ளைகள் பழைய தொலைபேசிகளையும் குறைந்த தரவு திட்டங்களையும் நம்பி உள்ளனர்.
எடுத்துக்காட்டு ,ஒரு பணக்கார மாணவர் ஆன்லைன் மூலம் ஒரு தேர்வுக்கு தயாராகும்போது பொருளாதாரத்தில் பின்தங்கிய மாணவர் போதிய வசதி இல்லாததால் அந்த வாய்ப்பை இழக்கிறார்.
ஆண்களுக்கும் பெண்களுக்கும் இடையே தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் ஒன்றும் பெரிய இடைவெளி உள்ளது. இன்றும் பல வீடுகளில் ஸ்மார்ட் போன் என்பது முதலில் ஆண்களுக்கே (தந்தை அல்லது சகோதரர்) வழங்கப்படுகிறது. பெண்கள் அதை அவசர தேவைகளுக்கு மட்டும் பயன்படுத்த அனுமதிக்கப்படுகிறார்கள் .
எடுத்துக்காட்டு கிராமப்புறங்களில் ஒரு வீட்டில் ஒரு மொபைல் போன் இருந்தால் ஆன்லைன் வகுப்பிற்காக அது பெரும்பாலும் ஆண் குழந்தைகளுக்கு முன்னுரிமை கொடுத்து வழங்கப்படுவதை நாம் காணலாம்.
தொழில்நுட்ப வடிவமைப்புக்கள் பெரும்பாலும் அனைவரையும் உள்ளடக்கியதாக இருப்பதில்லை. கண்பார்வை அற்றவர்களுக்கோ அல்லது செவித்திறன் குறைந்தவர்களுக்கோ ஏற்றவாறு இணையதளங்கள் வடிவமைக்கப்படாத போது அவர்கள் தொழில் நுட்பத்தை பயன்படுத்த முடிவதில்லை.
எடுத்துக்காட்டு ஒரு இணையதளத்தில் "Screen Reader " வசதி அல்லது வீடியோக்களில் "Subtitles " இல்லை என்றால் கண்பார்வை மற்றும் செவித்திறன் சவால் கொண்ட மாணவர்களால் அந்த தகவல்களை பெற முடியாது.
தகவல் தொழில்நுட்பத்தின் அபரிவிதமான வளர்ச்சியால் டிஜிட்டல் அறிவு (Digital Literacy) என்பது ஆடம்பரமல்ல ,அது ஒரு அடிப்படை தேவையாகி விட்டது. இருப்பினும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களிடைய நிலைவும் டிஜிட்டல் அறிவு பற்றாக்குறை கல்வித்துறையில் பல்வேறு சவால்களை உருவாக்கி வருகிறது. இது கற்றல் மற்றும் கற்பித்தல் ஆகிய இரு செயல்பாடுகளிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. பாரம்பரிய முறையில் பாடம் நடத்துவதில் தேர்ச்சி பெற்ற ஆசிரியர்கள் ஸ்மார்ட் போட்டுகள் ( Smart board), எல். எம் .எஸ் (LMS) இணையதளங்கள் மற்றும் மெய் நிகர் வகுப்பறைகளை கையாளுவதில் சிரமப்படுகின்றனர். இது பாடங்களை மாணவர்களுக்கு சுவாரசியமாக கொண்டு சேர்ப்பதில் தடையாக இருக்கிறது.
மற்றும் மாணவர்களின் வருகைப்பதிவு மதிப்பீடுகள் மற்றும் தரவுகளை சேமிப்பகத்தில் கையாள தெரியாத போது ஆசிரியர்கள் கைமுறையாக செய்யும் பணிகளுக்காக அதிக நேரத்தை செலவிடுகின்றனர். இது அவர்களின் கற்பித்தல் நேரத்தை குறைக்கின்றது.
அடுத்ததாக மாணவர்கள் இணையத்தில் கொட்டிக் கிடக்கும் தகவல்களில் எது சரியானது எது தவறானது என பிரித்தறியும் திறன் அவர்களிடம் குறைவாக உள்ளது.
எடுத்துக்காட்டு ஒரு ஆய்வு கட்டுரை எழுதும் மாணவர் ஆதாரப்பூர்வமான தரவுகளுக்கு பதிலாக விக்கிபீடியா போன்ற பொதுவான அல்லது நம்பகத்தன்மையற்ற தளங்களை மட்டுமே சார்ந்து இருப்பது.
தொழில்நுட்ப வசதிகள் மற்றும் அதை பயன்படுத்தும் அறிவு கொண்ட நகர்ப்புற மாணவர்களுக்கு கிராமப்புற மாணவர்களை விட கல்வியில் முன்னே செல்கின்றனர் .இது மாணவர்களிடைய ஒரு பெரிய அறிவு இடைவெளியை உருவாக்குகிறது.
இவ்வாறான நிலைமைகளை தீர்ப்பதற்கு, அரசு மற்றும் கல்வி நிறுவனங்கள் ஆசிரியர்களுக்கு புதிய மென்பொருட்கள் மற்றும் செயலிகள் குறித்த முறையான பயிற்சிகளை வழங்க வேண்டு,ம் டிஜிட்டல் இணைய நெறிமுறைகள் ஆகியவற்றை ஒரு பாடமாகவே சேர்க்க வேண்டும். அனைத்து மாணவர்களுக்கும் சமமான இணைய வசதி மற்றும் கணினி வசதிகளை உறுதி செய்வது அரசின் கடமையாகும்.
எனவே டிஜிட்டல் அறிவு பற்றாக்குறை என்பது தனிப்பட்ட நபரின் குறைபாடு அல்ல அது ஒரு சமூக கல்வி சவால் ஆசிரியர் மற்றும் மாணவர் இருதரப்பினரும் தொழில்நுட்பத்தை ஒரு கருவியாக கருதி, அதை சரியான முறையில் பயன்படுத்த கற்றுக் கொண்டால் மட்டுமே எதிர்கால உலகம் எதிர்பார்க்கும் தரமான கல்வியை எட்ட முடியும்.
தொழில்நுட்பம் என்பது ஒருவரை மற்றவரிடம் இருந்து பிரிப்பதாக இருக்கக் கூடாது மாறாக ,அது அனைவரையும் இணைப்பதாக இருக்க வேண்டும்." டிஜிட்டல் இலங்கை " போன்ற கனவுகள் நினைவாக வேண்டுமானால் அது அடித்தட்டு வகுப்பறைகளிலிருந்து தொடங்க வேண்டும். தொழில் நுட்ப இடைவெளியை குறைப்பதன் மூலமே நாம் உண்மையிலேயே சமத்துவமான மற்றும் வலிமையான ஒரு கல்வி சமுதாயத்தை உருவாக்க முடியும்.
சுதா காந்தன் ருசாளினி
2 ஆம் வருடம்
கல்வியியல் சிறப்பு கற்கை,
கல்வி , பிள்ளை நலத்துறை
கிழக்கு பல்கலைக்கழகம்,
இலங்கை.










.jpg)

