ஐக்கிய அரபு அமீரகத்தின் மீதான தாக்குதல்கள் - ஜனாதிபதி அநுர கடும் கண்டனம்
ஐக்கிய அரபு அமீரகம் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களை வன்மையாகக் கண்டித்துள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இந்த இக்கட்டான தருணத்தில் இலங்கை எப்போதும் அமீரகத்திற்குத் துணை நிற்கும் எனத் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யானை (Mohamed Bin Zayed) இன்று புதன்கிழமை (04) தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசிய ஜனாதிபதி, தனது ஆழ்ந்த கவலையையும் ஒருமைப்பாட்டையும் வெளிப்படுத்தினார்.
இது தொடர்பில் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தனது 'எக்ஸ்' தளத்தில் விடுத்துள்ள பதிவில்,
"ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி மேதகு முகமது பின் சயீத் அல் நஹ்யானை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அண்மைய தாக்குதல்கள் குறித்து கவலையைத் தெரிவித்தேன். அனைத்து வகையான வன்முறைகளையும் பயங்கரவாதத்தையும் இலங்கை வன்மையாகக் கண்டிக்கின்றது. அமீரகத்தின் பாதுகாப்பு மற்றும் இறையாண்மை விடயத்தில் இலங்கை உறுதியாகத் துணை நிற்பதுடன், சாத்தியமான அனைத்து உதவிகளையும் வழங்கத் தயாராக உள்ளது." எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஈரான் மற்றும் பிராந்தியத்தின் ஏனைய சக்திகளுக்கிடையில் நிலவும் போர் பதற்றங்களுக்கு மத்தியில், ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபி மற்றும் டுபாய் உள்ளிட்ட பகுதிகளை இலக்கு வைத்து ஏவுகணை மற்றும் ஆளில்லா விமானத் தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தன.
இத்தாக்குதல்களில் பொதுமக்களுக்கு காயம் ஏற்பட்டுள்ள நிலையில், சர்வதேசத் தலைவர்கள் பலரும் அமீரகத்திற்குத் தமது ஆதரவைத் தெரிவித்து வருகின்றனர்.













