பாடசாலையில் பழைய மாணவர் சங்கம்
ஆரம்ப காலங்களில் ஆங்காங்கே சிதறிக்கிடந்த கல்வி பயின்ற பல நண்பர்கள் ஒன்றாக இணைந்து தமது
பாடசாலைக்கால நினைவுகளை மீட்கும்பொருட்டு உருவானதே பழைய மாணவர்கள் என அழைக்கப்பட்டனர். பின்னர் வந்த காலங்களில் தாம் கல்விகற்ற பாடசாலை க்கு தங்களால் இயன்ற மேம்பாடுகளையும் தேவையான வழங்களையும் ஏற்படுத்தவேண்டுமென முயன்றதன் விளைவே அது பழைய மாணவர் சங்கமாக வலுப்பெற ஊன்றுகோலாக அமைந்தது.
அந்தவகையில் தாம் கல்வி பயின்ற பாடசாலைக்கு தன்னால் இயன்ற ஏதாவது ஒன்றை ஏற்படுத்திக் கொடுக்கும் பொருட்டு நெருக்கமான வலையமைப்புகளை உருவாக்கவும் தொழிற்சந்தையில் தொடர்புகளை ஏற்படுத்தவும், எதிர்கால மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கும், தொழில் முறை, ஆளுமை திறன் என்பவற்றுடன் பாடசாலையின் உட்கட்டமைப்பு, சமூபண்பாட்டு வளர்ச்சிக்கும் பயனளிக்கும் வகையில் தமது செயற்றிறனை வழங்குவதே பழைய மாணவர் சங்கங்களின் நோக்கமாகுமாக அமைந்திருந்தது.
பாடசாலை ஒன்றுக்கு பழைய மாணவர்களின் தேவை எதன் பொருட்டு இன்றியமையாததாக அமைகின்றது.?
இது தொடர்பில் விரிவாக ஆராய்வோமானால்...
அறிவைப் புகட்டும் இடமாக மட்டுமின்றி மனித வளங்களை உருவாக்குவதில் முக்கிய பங்களிப்பினை வழங்குவதே பாடசாலை ஒன்றின் குறிப்படத்தக்க அம்சமாகும். அதனாலேயே நாம் அதனை பாடசாலை என் குறிப்பிடுகிக்றோம். அவ்வாறான பாடசாலையானது வளர்சியடையும் போது தலைநிமிர்தும், தளர்ச்சியடையும் போது அதுசார்ந்த சமூகத்தினருக்கு தலைகுனிவையும் ஏற்படுத்துவதுடன் குறிப்பிட்ட சமூகத்தினர் மத்தியில் பாரிய மாற்றத்தையும் நிகழ்துவதற்கு தவறுவதில்லை. அதேபோன்றே பாடசாலை சமூகத்தில் ஏற்படுகின்ற முன்னேற்றம் அல்லது தாழ்வானது அந்த பாடசாலையில் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கும் தவறுவதில்லை.
பாடசாலைகள் தம் குறிக்கோள்களையும் நோக்கங்களையும் செவ்வனை நிறைவேற்ற வேண்டுமாயின் அது சார்ந்த சமூகத்தின் ஆதரவு மற்றும் அங்கீகாரத்தை பெற்றித்தல் அவசியம். இதற்கு அச்சாணியாக இருந்து துணை புரிபவர்களில் பழைய மாணவர் சங்கத்தின் பங்களிப்பு இன்றியமையாததாகும். பழைய மாணவர் சங்கம் என்றால், தமது கல்வி பயணத்தை நிறைவு செய்து வெளியேறிய மாணவர்கள் தாங்கள் கற்ற கல்வி நிறுவனத்துடன் தொடர்ச்சியான உறவினை பேணும் நோக்கில் உருவாகும் அமைப்பே பழைய மாணவர் சங்கம் ஆகும். பாடசாலை மீதான நன்றி உணர்வு, விசுவாசம் என்பதின் விளைவாக தோன்றியவைது இதுவாகும்.
பழைய மாணவர் சங்கங்களின் தொடக்கம்
ஆரம்ப காலங்களில் நாட்டின் பிரபலமான பாடசாலைகளில் இருந்து பழைய மாணவர் சங்கங்கள் உருவாகி இயங்கி வந்திருப்பினும் அண்மைக்காலங்களாக இவை சாதாரண மற்றும் ஆரம்ப பாடசாலைகளிலும் வேரூன்றி செயற்படு வரும் அதேவளை சில பாடசாலைகள் வெளிநாடுகளிலும் கூட தமது பழைய மாணவர்ளை ஒன்றுகூட்டி வெற்றிகரமாக செயற்படுவதுடன் ஆக்கபூர்வமான நடவடிக்கைகளில் ஈடுபட்டு தமது பாடசாலையின் நலன் மற்றும் வளர்ச்சிக்காக பங்காற்றி வருகின்றன.
இவ்வாறானதொரு நிலைப்பாட்டுக்கு காரணம் கல்வி அமைச்சினாலும் கல்விப் பகுதியினாலும் வழங்கப்படுகின்ற அங்கீகாரமே பழைய மாணவர் சங்கத்தின் வளர்ச்சிக்கு உந்துதலாக அமைந்துள்ளது. பழைய மாணவர் சங்கத்தின் அடிப்படை நோக்கம், கல்வி நிறுவனம் மற்றும் மாணவர்கள் இடையிலான உறவை நிலைநாட்டுவதாகும். காலப் போக்கில் பழைய மாணவர்கள் கல்வி நிறுவனத்தை விட்டு வெளியேறினாலும் அவர்கள் தங்களின் அனுபவங்கள், அறிவு, வளங்கள் மற்றும் சமூகத் தொடர்புகள் மூலம் மீண்டும் கல்வி நிலையத்துக்கு சேவை செய்வதனூடாக பாடசாலையின் பாரிய முன்னேற்றத்திற்கு பங்காற்றி வருகின்றனர்.
பழைய மாணவரகள் எனப்படுவோர் தமது பாடசாலைக்கு இவ்வாறான பல சேவைகளையும் உதவிகளையும் வழங்கி வருகின்றன போதிலும் மறுபக்கத்தில் பல பாடசாலைகளில் இச் சங்கங்களின் செயற்பாடுகள் அது உருவாக்கப்பட்டதன் நோக்கத்தையே கேள்விக்குள்ளாக்கும் அதேவளை பல சந்தர்ப்பங்களில் பழைய மாணவர்களின் செயற்பாடுகளானது தாம் கற்ற பாடசாலையையே இழிவு படுத்துவதாகவும் அமைந்துவிடுகிறது.
அதாவது பதவிப் போட்டியினாலும், தம்மை முன்னிலைப்படுத்துவதற்கும், சில வேளைகளில் பாடசாலையின் செயல்பாடுகளை தமது கட்டுப்பாட்டில் வைத்திருக்கவும் சில பழைய மாணவரகள் முயற்சிப்பதே இவ்வாறான இழிநிலைக்கு காரணமாக அமைவதாக கூறப்படுவதை மறுப்பதற்கும் இல்லை.
பழைய மாணவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
அத்துடன் பதவிப்போட்டி, கோஷ்டிமோதல்கள், நிதிதிரட்டும் போது ஒருவர்மீது அழுத்தத்தை பிரயோகித்து நெருக்கடிக்குள்ளாக்குவது மற்றும் தன்னுடைய தராதரத்தை காட்டுவதற்கு பெரும் எடுப்பில் கலை நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்வது போன்ற இச்செயற்பாடுகளை பார்க்கும் பொழுது இவர்கள் தமது பாடசாலை காலத்திலும் தாம் வாழ்ந்த சமூகத்திலிருந்தும் என்ன படிப்பினைகளை கற்றுக் கொண்டார்கள் என்ற கேள்வியே மேலெழுவதுடன் இவர்கள் தமக்கு பின்னர் வரும் தலைமுறைகளுக்கு என்ன வகையான உதாரணத்தை விட்டுச் செல்வார்கள் என்ற கேள்வியும் எழாமலில்லை.
மேற்படி சந்தர்ப்ங்கள் ஏற்படும்போதே பாடசலைகளுக்கு பழைய மாணவர் சங்கமானது அவசியமானதா என்ற கேள்வி எழுந்தாலும்கூட அதனை நாம் கல்வியின் நோக்கிலும் பாடசாலையின் வளர்சியின் அடிப்படை யிலும் ஆராயவேண்டும். ஆம் பழைய மாணவர் சங்கத்தின் செயற்பாடு பாடசாலை ஒன்றுக்கு அவசியம் என்றே கூறவேண்டும். "திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒளிக்க முடியாது" என்ற கூற்றுகிணங்க விரும்பத்தகாத செயற்பாடுகளில் ஈடுபடும் பழைய மாணவர் தங்களது சுயலாபத்தையோ அல்லது தங்களது பாச்சாதாபங்களையோ ஒதுக்கிவிட்டு தமது பாடசாலையின் வளச்சிக்காக மாத்திரம் செயற்படுவார்களேயானால் பழைய மாணவர் சங்கங்களின் செயற்பாடுகள் இன்றைய காலகட்ட த்தில் பாடசாலைகளுக்கு மிகவும் அவசியமானதொன்றாகும்.
பாடசாலை ஒன்றுக்கு பழைய மாணவர் சங்கங்கள் ஏன் அவசியம்?
21ஆம் நூற்றாண்டானது மாற்றங்களால் நிரம்பிய ஓடையாகவும் தொழில்நுட்பங்களால் நிறைந்த மாபெரும் தொழிற்சாலையகவும் காணப்படும் அதேநேரத்தில் இன்றைய தொழில்நுட்பமானது நாளை பழையதாக மாறி விடும் வேகத்தில் வளர்வதால் இன்றைய மாணவர்கள் புத்தகத்திற்குள் அடங்காத திறன்களையும், வகுப்பறை- களைத் தாண்டி கற்கும் வாய்ப்புகளையும் தேடி அலையவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. எனவேதான் கல்வி வழித்தடமானது, பொருளாதார மாற்றங்கள், தனியார் கல்வியின் விரிவாக்கம், மாணவர்களின் எதிர்பார்ப்பு, குடும்பங்களின் சமூக பண்பாட்டு மாற்றங்களால் உலகமானது வேகமாக நகர்வதால் ஒரு பாடசாலையின் சுவர்கள் மட்டும் அதற்கு எந்த ஒரு வகையிலும் ஈடுகொடுக்க முடியாது என்பதே நிதர்சனமா உண்மையாகும். எனவேதான் மேற்படி தேவைகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து இளைய தலைமுறையினரை வெற்றிப்பாதை யில் முன்னோக்கி நகர்துவதற்கு பழைய மாணவர் சங்கங்களின் செயற்பாடானது அவசியமாகின்றது.
இலங்கையை பொறுத்தவரை பல பாடசாலைகள் இன்றும் வளப்பற்றாக்குறைகளால் நிறைந்து மாணவர்க ளுக்கு ஆரம்பக் கல்வியையே சரியான முறையில் வளங்குவதற்கு முடியாமல் திணறுவதை அவதானிக்க முடி- கின்றது. ஏனெனில் பல பாடசாலைகளில் இன்றும் ஆய்வகங்கள் இல்லை. சில பாடசாலைகளில் தொழில்நுட்ப வசதி இல்லை, விளையாட்டு உபகரணங்கள் இல்லை மற்றும் ஆசிரியர்கள் பற்றாக்குறை என்பன காணப்படுகின்ற இந்நிலையில் ஆசிரியர்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் செயல்பட்டாலும், அடித்தள ஆதரவு இல்லாமல் தரமான கல்வி வழங்குவது என்பது கடினமான விடயமாகும். எனவே தான் இவ்வகையான அடித்தளத்தைக் கட்டியெழுப்புவதற்கு "பழைய மாணவர்கள் சங்கம்” பாடசாலை ஒன்றுக்கு அவசியமாகின்றது.
பாடசாலையின் முன்னேற்றத்திற்கு பழைய மாணவர் சங்கங்கத்தினரின் தேவை
பாடசாலைக் கட்டிடங்கள், நூலக வசதிகள், விளையாட்டு உபகரணங்கள், அறிவியல் ஆய்வகங்கள், கணினி ஆய்வகங்கள், என பாடசாலையின் உட்கட்டமைப்பு மேம்பாடு மாணவர்களின் கற்றல் தரத்தை நேரடியாக பாதிக்கின்றது. ஒருசில பாடசாலைகளை தவிர்த்து அனைத்து பாடசாலையினாலும் இந்த கட்டமைப்பு வசதிகளை உருவாக்குவது என்பது இயலாகாரியமாகையால் பாடசாலைகளின் பழைய மாணவர்கள் ஒருங்கிணைந்து நிதி திரட்டுவதும், பொருள் நன்கொடைகள் வழங்குவதும், வெளிநாட்டு மானியங்களை பெற்றுத்தருவதும், பாடசாலைக்கான பாரிய திட்டமிடல்களை மேற்கொள்வதானது பாடசாலைளுக்கும் பழைய மாணவர்களுக்கும் இடையிலான பரஸ்பரம் புரிந்துணர்வை எடுத்தியம்புகின்றது. உதாரணமாக, இலங்கையின் பல பாடசாலைகளில் பழைய மாணவர் சங்கங்கள் நிதி திரட்டி அதிநவீன கணினி ஆய்வகங்களை அமைத்து மாணவர்களுக்கு தொழில் நுட்பக் கல்வி வழங்கும் வாய்ப்பை வழங்கியிருப்பதை குறிப்பிட்டுக்கூறலாம்.
தங்களின் வாழ்க்கை அனுபவங்களைப் பகிர்ந்து, இளைய தலைமுறைக்கு நடைமுறை வழிகாட்டுதலை பழைய மாணவர்களால் மட்டுமே வழங்கமுடியும். இவர்கள் பாடசாலையின் மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டுதல் கருத்தரங்குகள், ஊக்கமூட்டும் உரைகள், தலைமைத்துவ பட்டறைகள், ஆராய்ச்சி பயிற்சி, உதவித்தொகை விவரங்கள், வெளிநாட்டு கல்வி வழிகாட்டுதல் போன்ற நிகழ்ச்சிகளை நடத்துவதானால் இன்றைய மாணவர்களின் அறிவுக் கண்களை மாத்திரமன்றி படிப்பினால் முடியாத பல தொழில் வழி காட்டுதல்களையும் வழங்க முடியும்.
பழைய மாணவர் சங்கமானது தலைமுறைகளைக் இணைத்து அனுபவ பரிமாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அவசியமாகின்றது. நவீன கல்வி சூழலில், புத்தகங்களில் இல்லாத அறிவு அதிகம். ஒரு மாணவர் பாடசாலை யில் படிக்கும் போது, "எப்படி நான் வாழ்க்கையில் முன்னேறலாம்?” “நான் தேர்ந்தெடுக்கும் துறை சரியானதா?" போன்ற கேள்விகளினால் குழப்பங்கள் உண்டாகின்றன. இந்நிலையில், முன்னேறிய பழைய மாணவர்கள் தங்கள் வாழ்க்கைப் பயணத்தைப் பகிரும்போது, இளம் தலைமுறைக்கு நம்பிக்கையும் ஊக்கமும் கிடைக்கிறது.
பழைய மாணவர் சங்கத்தினரின் சமூக பொறுப்பு
பழைய மாணவர் சங்கமானது சமூக பொறுப்புணர்வைப் மாணவர்களிடம் வளர்ப்பதற்கு அவசியமாகின்றது. பாடசாலையானது மாணவர்களுக்கு கல்வியை மட்டும் வழங்கும் இடமல்ல மாறாக சமூகப் பொறுப்புணர்வையும் ஊக்குவிக்கும் அடித்தளமாகவும் செயற்படுகிறது. உதாரணமாக பழைய மாணவர்களால் மேற்கொள்ளப்படும் இரத்த தான முகாம்கள், மரம் நடும் திட்டங்கள், சுற்றுச்சூழல் சுத்தம் செய்யும் நடவடிக்கைகள், சமூகவிழிப்பு- ணர்வு பிரச்சாரங்கள், சுகாதார மருத்துவமனைகள் போன்ற சமூகச் சேவைகளை பாடசாலையுடன் இணைந்து நடாத்தும்போது, மாணவர்களிடம் சமூகப் பொறுப்புணர்வானது நன்றாக வளர்க்கப்படுகின்றது.
அனுபவம் வாய்ந்த ஆசிரியர்களை வரவழைத்து மாணவனின் கல்வி வளர்ச்சிக்கு அத்திவாரமிடுவதான செயற்பாடானது பழைய மாணவர் சங்கத்தினர் தங்களது இளம் தலைமுறையினரை சரியான பாதையில் அழைத்துச் செல்வதற்கு பெரும்பங்களிப்புச் செய்கின்றனர்.
அதன் ஒரு பகுதியாகவே நன்கு திறன்பட்ட ஆசிரியர்களை வரவழைத்து மாணவர்களுக்கு கருத்தரங்குகள் நடத்துவதானது கா.பொ.த சாதரண தர பரீட்சை காலத்திலோ அல்லது க.பொ.த உயர்தர பரீட்சை காலங்களிலோ மாணவர்கள் சிறந்த பெறுபேறுகளை பெறுவதற்கு ஊன்று கோலாக அமைகின்றன. அத்துடன் பரீட்சைகள் முடிவடைந்த பின்னரும் மாணவர்களை அவர்கள் போக்கில் விட்டுவிடாமல் சிறந்த சிறந்த ஆசிரியர்களை கொண்டு மாணவர்களுக்கு தொழில் வழிகாட்டல்கள் தொடர்பான அமர்வுகளை மேற்கொள்வதன் மூலம் இதனூடாக மாணவர்கள் சிறந்த தொழில் அறிவை மட்டும் அன்றி பரீட்சைகளில் சிறந்த பெறுபேற்றை பெறாத மாணவர்கள் தங்கள் தொழில் வழிகாட்டுதல்ளை பெற்று தங்கள் எதிர்கால வாழ்கையை சிறப்பாக அமைப்பதற்கு காரணமாக அமைகின்றது.
பழைய மாணவர் சங்கங்கள் எதிர்கொள்ளும் சவால்கள்
பாடசாலைகளும் பழைய மாணவர்களுக்குமான இவ்வாறான பின்னிப்பினைந்த தொடர்புகள் காணப்படினும் பாடசாலைகளில் இச் செயற்பாடுகளை முன்னெடுப்பதில் பழைய மாணவர்கள் எதிர்கொள்றும் சிரமங்கள் சொல்லிடங்காதது. உதாரணமாக பாடசாலை மேம்பாட்டுகான நிதி திரட்டுவதாக இருக்கட்டும் பல பழைய மாணவ ர்களின் ஆர்வமின்னமயால் அவர்களை ஒன்று திரட்டுவதில் காணப்படும் சிரமங்கள், ஏனைய சங்களுடனான போட்டிகாரமாக மாணவர்களுக்கான கருத்தரங்குகளை ஏற்பாடு செய்வதில் காணப்படும் சிரமம், சில பழைய மாணவர்களின் ஒழுக்கமற்ற செயற்பாடுகள், மாணவர்களின் ஆர்வமின்மை, என்பன போன்ற காரணங்களால் பல பழைய மாணவர் சங்கம் தனது பணியினை முன்னெடுப்பதில் பல சவால்களை எதிர் கொண்டாலும் தாம் கற்ற பாடசாலையை சிறந்த இடமாக மாற்றுவதில் இவர்கள் ஒருபோதும் பின்வாங்கியது கிடையாது என்றே கூறவேண்டும்.
"கேடில் விழுச்செல்வம் கல்வி யொருவற்கு மாடல்ல மற்றையவை’ எனும் குறளுக்கேற்ப எந்தப் பருவத்துக்கும் கேடிலாத கல்வியை வழங்கும் பொருட்டு, வளர்ந்து வரும் இன்றைய காலகட்டத்திற்கேற்ப பாடசாலை ஒன்றினை சிறந்த இடமாகவும் மாணவர்களை பொறுப்புள்ள பிரஜைகளாகவும் மாற்றுவதில் பழைய மாணவர் சங்கத்தின் முயற்சியானது இன்றியமையாத ஒன்றாகும். கல்வித் தத்துவங்கள் எவ்வாறு ஒரு மனிதனை பூரண மானதனாக்குகின்றதோ அதேபோன்றதே ஒரு பாடசாலையின் உண்மையான வளர்ச்சியானது வெறுமெனே அதன் கட்டிடங்களில் அல்லாமல் அந்த பாடசாலையினுடைய பழைய மாணவர்களின் சாதனைகளிலும், அவர்கள் அந்த பாடசாலைக்கு செய்த சேவை எனப்படும் நன்றிக் கடன் செயல்பாடுகளிலுமே தங்கியுள்ளதனாலேயே பாடசாலைகளும் சரி எதிர்கால மாணவர் வாழ்விலும் சரி வளர்ச்சியை ஏற்படுத்துவதற்கு பழைய மாணவர் சங்கங்கள் தேவை அவசியமாகதொன்றாகும்.
சிவபாலசுந்தரம் சிவரஞ்ஜினி,
2ஆம் வருட சிறப்பு கற்கை மாணவி,
பிள்ளை நலத்துறை,
கிழக்கு பல்கலைகழகம்.











.jpg)

