
17 இலட்சம் ரூபா விற்கும் அதிகமான பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை அநுராதபுரம் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
குறித்த சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவுக்கு கிடைத்த முறைப்பாட்டினை அடுத்து தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் 17 ஆம் திகதி மாலை அநுராதபுரம் பண்டுளகம பகுதியில் வைத்து கொள்ளைச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபரை பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர் 54 வயதுடைய சாலியவெவ பகுதியைச் சேர்ந்தவர் என்பது ஆரம்பகட்ட பொலிஸ் விசாரணைகளில் இருந்து தெரிய வந்துள்ளது.
சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது.
கடந்த 02 ஆம் திகதி இரவு, அநுராதபுர பேருந்து நிலையத்திலிருந்து கொழும்புக்கு செல்லும் பேருந்தில் குறுகிய தூரம் பயணம் செய்து கொண்டிருந்த மூன்று பெண்களுக்கு அடையாளம் தெரியாத நபர் ஒருவர் பேருந்தில் அவர்களுக்கு சிற்றுண்டியும் பானமும் வழங்கியுள்ளார்.
அப்போது, அந்த மூன்று பெண்களும் மயங்கி விழுந்துள்ள நிலையில் மேலும், அடையாளம் தெரியாத அந்த நபர், பெண்களிடமிருந்து 17,06,400/= மதிப்புள்ள ரொக்கம் மற்றும் தங்க நகைகளைத் திருடிவிட்டுச் சென்றதாகக் கூறப்பட்ட புகாரின் அடிப்படையில் விசாரணை தொடங்கப்பட்டுள்ள நிலையிலேயே சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.
பொதுப் போக்குவரத்தில் பயணம் செய்யும்போது, முன்பின் தெரியாதவர்களுடன் ஏற்படும் நட்பின் அடிப்படையில், பொதுமக்களுக்கு சில சமயங்களில் போதைப்பொருட்கள் கலந்த தின்பண்டங்களும் பானங்களும் வழங்கப்படுகின்றன.
இதுபோன்ற முன்பின் தெரியாதவர்கள் வழங்கும் உணவு அல்லது பானங்களை ஏற்றுக்கொள்ளும்போது மிகவும் கவனமாகவும் விவேகமாகவும் இருக்குமாறு பொலிஸார் இதற்கு முன்னர் பலமுறை எச்சரித்துள்ளதுடன், இதுபோன்ற மோசடி நபர்களிடம் பொதுமக்கள் ஏமாற வேண்டாம் என்றும் வேண்டுகோள் விடுக்கிறது.சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.












.jpg)