பொலிஸ் ஆட்சேர்ப்பு வயது எல்லை குறித்து சமூக வலைத்தளங்களில் பரவும் தகவல்கள் பொய்யானவை - பொலிஸ் தலைமையகம்!


இலங்கை பொலிஸ் திணைக்களம் மற்றும் விசேட அதிரடிப்படைக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படவுள்ள பயிலுநர் அதிகாரிகளின் வயது எல்லை தொடர்பாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் தகவல்கள் குறித்து பொலிஸ் தலைமையகம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.

இலங்கை பொலிஸ் சேவையின் பயிலுநர் பொலிஸ் கான்ஸ்டபிள், பெண் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதி ஆகிய பதவிகளுக்கான ஆட்சேர்ப்பு தொடர்பாக கடந்த மார்ச் 27ஆம் திகதியிடப்பட்ட 2482 இலக்க அரச வர்த்தமானி அறிவித்தல் ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளது.

குறித்த விண்ணப்பங்கள் நிகல்நிலை ஊடாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பங்களை ஏற்கும் இறுதித் திகதி எதிர்வரும் மே 08ஆம் திகதி என குறிப்பிடப்பட்டுள்ளது.

வர்த்தமானியின் படி வயது எல்லைகளாக, பயிலுநர் பொலிஸ் கான்ஸ்டபிள் மற்றும் பெண் பொலிஸ் கான்ஸ்டபிள்: 18 வயதுக்கு குறையாதவராகவும் 24 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

பயிலுநர் பொலிஸ் கான்ஸ்டபிள் சாரதிகள் 18 வயதுக்கு குறையாதவராகவும் 28 வயதுக்கு மேற்படாதவராகவும் இருத்தல் வேண்டும்.

மேற்கூறப்பட்ட அனைத்து பதவிகளுக்குமான வயது எல்லை 28 வயது வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்திகள் முற்றிலும் உண்மையற்றவை என பொலிஸ் தலைமையகம் அறிவித்துள்ளது. இவ்வாறான போலித் தகவல்களைப் பரப்புபவர்களைக் கண்டறிய விசேட விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

எனவே, இவ்வாறான போலிச் செய்திகளை நம்ப வேண்டாம் எனவும், அரச வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ள அடிப்படைத் தகுதிகளைக் கொண்டிருப்பின் மாத்திரம் விண்ணப்பங்களைச் சமர்ப்பித்து நேர்முக பரிட்சைகளில் கலந்துகொள்ளுமாறும் விண்ணப்பதாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.