180 அலகுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்துவோருக்கு 18% கட்டண உயர்வு !


2026 ஆம் ஆண்டின் இரண்டாம் மற்றும் மூன்றாம் காலாண்டுகளுக்கு அமைவாக, 180 அலகுகளுக்கு மேல் மின்சாரத்தைப் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினரின் மின்சாரக் கட்டணத்தை 18 சதவீதத்தால் அதிகரிக்க இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

இருப்பினும், 180 அலகுகளுக்குக் குறைவாகப் பயன்படுத்தும் வீட்டுப் பிரிவினரின் மின்சாரக் கட்டணத்தில் எவ்வித மாற்றமும் செய்யப்படமாட்டாது என அந்த ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

மின் உற்பத்திச் செலவு அதிகரித்தமையால் இந்த மற்றும் அடுத்த காலாண்டுகளில் சுமார் 38 பில்லியன் ரூபாய் பற்றாக்குறை தொகை ஏற்படுகின்றமை உள்ளிட்ட மூன்று பிரதான காரணிகளை முன்னிலைப்படுத்தி மின் கட்டணத்தை 18 சதவீதத்தால் உயர்த்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், அரசாங்கம் 15 பில்லியன் ரூபாய் நிவாரணத்தை வழங்க எழுத்துப்பூர்வமாக இணங்கியுள்ளதால், இந்த அதிகரிப்பு 5 சதவீதமான மின் நுகர்வோரை மாத்திரமே தாக்கம் செலுத்தும் என ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

இதன்படி, நாட்டின் 95 சதவீதமான மின் நுகர்வோருக்கு இந்த மின்சாரக் கட்டண அதிகரிப்பு பொருந்தாது என ஆணைக்குழு மேலும் சுட்டிக்காட்டியுள்ளது