2.5 மில்லியன் டொலர் மோசடி...!



திறைசேரியின் கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவிய மோசடிக்குழுவினர் அவுஸ்திரேலிய நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய 2.5 மில்லியன் அமெரிக்க டொலர்களில் ஒரு பகுதி நிதியை அமெரிக்காவின் டெலவெயா மாநிலத்தில் உள்ள வங்கியின் கணக்கொன்றுக்கு மாற்றப்பட்டுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

குறித்த கணக்கானது டெலவெயா மாநிலத்தில் உள்ள 'ரி.டி' வங்கியின் கிளையொன்றில் பராமரிக்கப்பட்டு வந்துள்ளதோடு, இணைய வணிகப் பதிவுகளில் ஈடுபடும் நிறுவனமொன்றின் பெயரில் அது இயங்கி வந்துள்ளதாக விசாரணைகளை முன்னெடுக்கும் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

மோசடி செய்யப்பட்ட முழுத்தொகையும் ஒரே கணக்கிற்குச் செல்லவில்லை எனவும், பல்வேறு கணக்குகளுக்குப் பணம் பிரிக்கப்பட்டு அனுப்பப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு பகுதி மாத்திரமே குறித்த கணக்கிற்கு வந்துள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

இலங்கை மத்திய வங்கியின் நிதி புலனாய்வுப் பிரிவு, அமெரிக்காவின் பெடரல் புலனாய்வுப் பணியகம் மற்றும் அவுஸ்திரேலிய அதிகாரிகளுடன் இணைந்து முன்னெடுத்த விசாரணைகளின் மூலமே இந்தத் தகவல்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
இலங்கை செய்திகள்

அவுஸ்திரேலியாவிற்கான இருதரப்புக் கடன் கொடுப்பனவாக வழங்கப்படவிருந்த இந்தப் பணம், நிதி அமைச்சின் மின்னஞ்சல் கணக்குகள் ஊடுருவப்பட்டதன் விளைவாக மோசடிக்காரர்களின் கணக்குகளுக்குச் சென்றுள்ளதோடு இது தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள அரச நிதி பற்றிய குழு திறைசேரியின் கடன் சேவை செலுத்தும் செயல்முறை முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளதால், பௌதீக ஆவணங்களோ அல்லது கையொப்பங்களோ இன்றி குறிப்பிட்ட அதிகாரிகளின் அதிகாரத்தின் கீழ் மாத்திரமே இவை முன்னெடுக்கப்படுவதாகச் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.