சர்வதேச அன்னையர் தின வாழ்த்துக்கள்..



தாயின் அன்பு மற்றும் தியாகத்தை போற்றும் வகையில் உலகம் முழுவதும் இன்று (மே.10) அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.

ஒவ்வொரு ஆண்டும் மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை அன்னையர் தினமாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய இலங்கை, இந்தியா, அமெரிக்கா மற்றும் பல நாடுகளில் அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

சில நாடுகள் இந்த ஞாயிற்றுக்கிழமையை 'அன்னையர் ஞாயிறு' என்றும் அழைக்கின்றன.

பிறந்தது முதல் தாயையே வாழ்வாகக் கொண்ட ஒரு சமூகத்தில், அந்த அன்பின் மகத்துவத்தை மீண்டும் மீண்டும் நினைவுகூர இந்நாள் முக்கியமானதாக அமையும்.

அன்னையர் தினத்தின் ஸ்தாபகராக அன்னா ஜார்விஸ் என்ற பெண்மணி கருதப்படுகிறார்.

இவரது தாயார் ஆன் ரீவிஸ் ஜார்விஸ் (Ann Reeves Jarvis) என்பவர், அமெரிக்க உள்நாட்டுப் போரின் போது தாய்மார்கள் மற்றும் வீரர்களின் சிறந்த ஆரோக்கியத்திற்காக அயராது உழைத்த ஒரு பிரபல சமூக ஆர்வலர் ஆவார்.

1905 ஆம் ஆண்டு ஆன் ரீவிஸ் ஜார்விஸின் மறைவிற்குப் பிறகு, அன்னா ஜார்விஸ் தனது தாயைக் கௌரவிப்பதற்கும் தனது நன்றியைத் தெரிவிப்பதற்கும் ஒரு நாளை உருவாக்க விரும்பினார்.

அவரது அந்த முயற்சி வெற்றியளித்த நிலையில், 1914 ஆம் ஆண்டு அப்போதைய அமெரிக்க ஜனாதிபதி வூட்ரோ வில்சன் (Woodrow Wilson),மே மாதத்தின் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமையை அன்னையர் தினமாக பெயரிட்டதுடன், அன்றைய தினத்தை ஒரு பொது விடுமுறை தினமாகவும் உத்தியோகபூர்வமாக அறிவித்தார்.

அதன்படி, அன்று முதல் உலகம் முழுவதும் ஒவ்வொரு ஆண்டும் மே மாத இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலக அன்னையர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது.

எவ்வாறாயினும், அன்னையர் தினம் என்று ஒன்று உருவாக்கப்பட்ட போதிலும், தற்போது பல தாய்மார்களுக்கு பிள்ளைகளின் அரவணைப்பு மற்றும் பாதுகாப்பு கிடைக்காத ஒரு நிலை உருவாகியுள்ளமை கவலைக்குரிய விடயமாகும்.

பிறந்த நாள் முதல் தாயையே வாழ்வாகக் கொண்ட நமக்கு, அந்த அன்பின் உன்னதத்தை மீண்டும் ஒருமுறை நினைவுகூர இந்நாள் முக்கியமானது.

ஏனெனில், தாயின் பெருமையை உணராத ஒரு சில பிள்ளைகளும் சமூகத்தில் உள்ளனர்.

இந்நிலையில் அம்மாவை மகிழ்ச்சிப்படுத்துவது என்பது எப்போதும் விலையுயர்ந்த பரிசுகளில் மட்டும் இல்லை, அது நீங்கள் காட்டும் அக்கறையிலும் செலவிடும் நேரத்திலும்தான் தங்கி இருக்கிறது.

இவ்வாறானதொரு முக்கியமான நாளில் சகல அன்னையர்களுக்கும் அத தெரண தமது வாழ்த்துக்களை தெரிவிக்கின்றது.