அரசாங்கத்தின் தேவைக்காக வாக்குமூலங்கள் வலுக்கட்டாயமாக பெறப்படுகின்றன – நாமல் குற்றச்சாட்டு


அரசாங்கத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக வாக்குமூலங்கள் வலுக்கட்டாயமாக பெறப்படுகின்றன. அரசாங்கத்தின் விருப்பத்திற்கு இணங்காவிட்டால் சாட்சியாளர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்படுகிறது. அரசாங்கத்திற்கு எதிராகச் செயல்படும் நபர்களைச் திட்டமிட்ட முறையில் ஒடுக்குவதற்கும், தேவைப்பட்டால் உயிரைப் பறித்தேனும் அந்த ஒடுக்குமுறையை முன்னெடுப்பதற்கும் அரசாங்கம் துணிந்துள்ளதாக ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார்.

குருநாகல் - ஹிரியால பகுதியில் சனிக்கிழமை (09) இரவு நடைபெற்ற மக்கள் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

ஒரு கட்சியாக நாங்கள் கிராமம் கிராமமாகச் செல்லும் வேளையில், தேர்தல் நடத்தப்படுமா என்பதில் சந்தேகம் காணப்படுகிறது. தேர்தல் எப்போது நடக்கும் என்பது எவருக்கும் தெரியாது. ஒவ்வொரு கிராமத்திலும் ஒவ்வொரு தொகுதியிலும் இந்த நாட்டை நேசிக்கும் மக்கள் எமது கட்சியை மீண்டும் நாடுகிறார்கள்.

நான்கு ஆண்டுகளுக்கு முன்பு 'அரகலய' (போராட்டம்) என்ற பெயரில் எமது கட்சியினரைத் தாக்கி, வீடுகளுக்குத் தீ வைத்து, பாராளுமன்ற உறுப்பினர் அத்துகோரளவை நடு வீதியில் கொலை செய்து, தமது அரசியல் நிகழ்ச்சி நிரலை நிறைவேற்ற ஒரு குழுவினர் முயற்சி செய்தனர். அதன் விளைவாகவே இந்த அரசாங்கம் ஆட்சிக்கு வந்தது என்பதை எவராலும் மறுக்க முடியாது.

உண்மையான நோக்கத்தில் போராட்டத்தில் ஈடுபட்டு இந்த நாட்டின் முறைமை மாற வேண்டும் என்றும், எதிர்கால சந்ததியினருக்கு ஏற்ற வகையில் அரசியல் நவீனமயப்படுத்தப்பட வேண்டும் என்று நினைத்த இளைஞர்களுக்கும், பேராசிரியர்களுக்கும் கூட அப்பட்டமான பொய்களைக் கூறி ஏமாற்றியே இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது.

பாராளுமன்றத்தில் ஒரு கேள்வி கேட்டால், மீண்டும் கொள்கைப் பிரகடனத்தைப் படிக்குமாறு கூறுகிறார்கள். எதிர்க்கட்சியினர் அல்ல ஆளும் தரப்பினர 159 பேரும் தான் முதலில் அதை வாசிக்க வேண்டும். கொள்கைப் பிரகடனத்தில் உள்ள எதுவுமே அவர்களுக்கு இன்னும் தெரியாது.

அரசாங்கத்தின் மோசடிகளை மறைக்க ஒடுக்குமுறை பயன்படுத்தப்படுகிறது. நிதியமைச்சின் 2.5 மில்லியன் டொலர் தவறான கணக்கிற்கு நிதிச் செயலாளர் செலுத்தியதை நாம் கண்டோம். இந்த நிதிச் செயலாளர் அரசாங்கத்தின் அரசியல் நியமனம் பெற்றவர். ஜனாதிபதி அவர் மீது வைத்த நம்பிக்கையின் பலன் நாட்டை உருவாக்குவது அல்ல, மாறாகப் பணத்தைத் தவறான கணக்குகளுக்கு மாற்றுவதுதான்.

மர்மமான கொலைகள் நடக்கின்றன, சட்டம் வளைக்கப்படுகிறது, சாட்சிகள் அச்சுறுத்தப்படுகிறார்கள். அரசாங்கத்திற்கு எதிராக நிற்பவர்களை ஒடுக்க எத்தகைய எல்லைக்கும் அவர்கள் செல்வார்கள். பொலிஸ் மா அதிபருக்கு நான் ஒன்றைக் கூறிக் கொள்கிறேன். தயவுசெய்து அந்தச் சீருடையின் கௌரவத்தைப் பாதுகாக்கவும். இன்னும் சில காலத்தில் ஓய்வு பெற்றுச் செல்வீர்கள், இந்த அரசாங்கமும் ஒருநாள் போகும். ஆனால், செய்யும் செயலால் இந்த பொலிஸ் திணைக்களம் மீதான நம்பிக்கையும் மக்கள் மத்தியில் அழிந்துவிடும் என்றார்.