
முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில மற்றும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர உள்ளிட்ட 06 பேருக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பின் கீழ் விசாரணையொன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகக் குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இன்று (15) கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் சுரேஷ் சலேயிடம் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு பாதகம் ஏற்படும் வகையிலும், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலும் மின்னணு ஊடகங்கள் வாயிலாகக் கருத்துக்களை வெளியிட்டமை தொடர்பிலேயே இந்த விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்தில் மேலும் தெரிவித்தனர்.
இதற்கமைய, பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான விமல் வீரவங்ச, உதய கம்மன்பில, அசங்க நவரத்ன ஆகியோர் வெளியிட்ட கருத்துக்கள் தொடர்பிலும், சுகீஸ்வர பண்டார மற்றும் மஹிந்த பத்திரண ஆகிய நபர்களுக்கு எதிராகவும் இந்த விசாரணை முன்னெடுக்கப்பட்டு வருவதாகப் விசாரணை அதிகாரிகள் மேலதிக அறிக்கையொன்றின் ஊடாக நீதிமன்றத்திற்கு அறிக்கையிட்டனர்.
இதன்போது, குறித்த 06 நபர்களையும் எதிர்வரும் ஜூலை மாதம் 01ஆம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவித்தல் (Notice) பிறப்பிக்குமாறு குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதிமன்றத்திடம் கோரிக்கை விடுத்தது.
எனினும், சம்பந்தப்பட்ட நபர்களை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைப்பதற்கான அறிவித்தல்களைப் பிறப்பிக்க வேண்டிய அவசியமில்லை என நீதவான் இதன்போது குறிப்பிட்டார்.
அவர்களுக்கு எதிராக 2024ஆம் ஆண்டின் 8ஆம் இலக்க நீதிமன்றம், தீர்ப்பாயம் அல்லது நிறுவனங்களை அவமதித்தல் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ளதால், சமர்ப்பணங்களுக்கு பின்னர் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்ய வேண்டுமே தவிர, அந்த நபர்களை நீதவான் நீதிமன்றத்திற்கு அழைக்கத் தேவையில்லை என்றும் நீதவான் சுட்டிக்காட்டினார்.







.jpeg)
.jpeg)



