
மட்டக்களப்பு மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இன்று (24) பாராளுமன்ற கேள்வி–பதில் நேரத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் இரா. சாணக்கியன் முக்கிய கவனயீர்ப்பை முன்வைத்தார்.
அரசின் நெல் கொள்வனவு விலை ஒரு கிலோகிராமுக்கு ரூ.137 என அறிவிக்கப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டிய அவர், ஒரு கிலோ நெல்லை உற்பத்தி செய்வதற்கான செலவு ரூ.135 முதல் ரூ.150 வரை உயர்ந்துள்ள நிலையில், இந்த விலை விவசாயிகளுக்கு நியாயமானதா என கேள்வி எழுப்பினார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் மொத்த உரத் தேவை சுமார் 8,000 மெட்ரிக் தொன் என மதிப்பிடப்பட்டுள்ள போதிலும், இதுவரை 4,000 மெட்ரிக் தொன் உரம் மட்டுமே வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். மேலும், CCS லங்கா நிறுவனத்தினால் வழங்கப்பட வேண்டிய 443 மெட்ரிக் தொன் உரத்தில் 300 மெட்ரிக் தொன் மட்டுமே கிடைத்துள்ளதாகவும் குறிப்பிட்டார்.
இதனால், பெரும்போக விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், விவசாயிகள் உரிய காலத்தில் தேவையான உரத்தைப் பெற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் 3,000 முதல் 3,500 மெட்ரிக் தொன் வரை மட்டுமே நெல்லைக் களஞ்சியப்படுத்தும் வசதி காணப்படுவதாகவும், விவசாயிகளின் உற்பத்தியை பாதுகாக்க தேவையான சேமிப்பு வசதிகள் போதுமானதாக இல்லையெனவும் தெரிவித்தார்.
2025 ஆம் ஆண்டு நாட்டை தாக்கிய ‘தித்வா’ சூறாவளி காரணமாக நெல் உள்ளிட்ட பல்வேறு விவசாயப் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 2026 ஆம் ஆண்டில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுமா என்ற அச்சமும் நிலவுவதாக அவர் கூறினார்.
இதனையடுத்து,
2025/2026 பெரும்போக நெல் உற்பத்தி தொடர்பான அரசின் தற்போதைய மதிப்பீடு என்ன?
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வழங்கப்பட்ட நிவாரணங்கள் மற்றும் இழப்பீடுகள் மாவட்ட வாரியாக வெளியிடப்படுமா?
வடக்கு, கிழக்கு மற்றும் மத்திய மாகாணங்களில் பெரும்போகச் செய்கையை வெற்றிகரமாக முன்னெடுக்க எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் என்ன?
உர விநியோக தாமதம் தொடர்பாக உடனடி தீர்வு வழங்கப்படுமா?
என்ற கேள்விகளையும் அவர் அமைச்சரிடம் முன்வைத்தார்.
விவசாயிகளின் வாழ்வாதாரத்தையும் நாட்டின் உணவுப் பாதுகாப்பையும் உறுதிப்படுத்தும் வகையில், நெல்லுக்கான நியாயமான விலையை நிர்ணயித்து அரசாங்கம் நேரடியாக நெல்லைக் கொள்வனவு செய்யும் நடைமுறையை அவசரமாக அமுல்படுத்த வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தினார்.












