மட்டக்களப்பில் கிழக்கு மாகாண மட்ட அகில இலங்கை தமிழ் மொழித் தின போட்டி ஆரம்பம்


(ஏ.எல்.எம்.ஷினாஸ்)


கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற அகில இலங்கை தமிழ் மொழித் தினம் -2026, மாகாணமட்ட போட்டி நிகழ்வுகள் மட்டக்களப்பு புனித மிக்கேல் கல்லூரியில் நேற்று (20) காலை ஆரம்பித்து வைக்கப்பட்டது.

கிழக்கு மாகாண கல்வித் திணைக்களத்தின் மாகாண கல்விப் பணிப்பாளர் சார்பில் மாகாண கல்வி திணைக்களத்தின் கல்வி நிருவாகத்திற்கு பொறுப்பான பிரதி கல்வி பணிப்பாளர் ஆர்.நிமலரன்ஜன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில்,

சர்வ மத கலாசார பாரம்பரிய நிகழ்வுகளோடு அதிதிகள் மட்டக்களப்பு பிரதான நகரில் இருந்து பாடசாலை வளாகம் வரை அழைத்து வரப்பட்டு அதனைத் தொடர்ந்து தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடலோடு பாடசாலையின் பிரதான மண்டபத்தில் நிகழ்வுகள் ஆரம்பமானது.

இதில் கிழக்கு மாகாண கல்வி திணைக்களத்தின் பிரதி கல்வி பணிப்பாளர் ஏ. ஜி.பஸ்மிர், பார்த்தீபன் சம்மாந்துறை வலயக்கல்வி பணிப்பாளர் எஸ்.மகேந்திரகுமார், அக்கரைப்பற்று வலயக் கல்விப் பணிப்பாளர் பி. எம்.வை. அறபாத், மட்டக்களப்பு
வலயக்கல்வி பணிப்பாளர் தினகரன் ரவி, கல்குடா வலயக்கல்வி பணிப்பாளர் ரி. ஆனந்தரூபன், மட்டக்களப்பு மேற்கு வலயக்கல்வி பணிப்பாளர் திருமதி. சிவசங்கரி கங்கேஸ்வரன் உட்பட மாகாண கல்வி திணைக்கள அதிகாரிகள், வலயக் கல்வி அலுவலகங்களில் கடமையாற்றும் பிரதி கல்வி பணிப்பாளர்கள், உதவிக் கல்விப் பணிப்பாளர்கள், ஆசிரிய ஆலோசகர்கள், ஆசிரிய வளவாளர்கள், பெற்றோர்கள், மாணவர்கள், பொறுப்பாசிரியர்கள் என பலர் கலந்து கொண்டனர்.

போட்டிகள் மட்டக்களப்பு வின்சன் மகளிர் உயர்தரப் பாடசாலை, மிக்கேல் கல்லூரி, மட்டக்களப்பு மகாஜனக் கல்லூரி, இந்து கல்லூரி ஆகிய பாடசாலைகளில் (20,21) இரண்டு தினங்கள் நடைபெறவுள்ளன. மாகாண தமிழ் தின மொழிப் போட்டிகளில் திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களை சேர்ந்த தமிழ் மொழி மூலமான 14 வலயங்களை சேர்ந்த முதல் நிலை பெற்ற மாணவர்கள் பங்கு பற்றுகின்றமை குறிப்பிடத்தக்கது.