
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் 12 வயது சிறுமி ஒருவர் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் 54 வயதுடைய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், குறித்த சிறுமியின் தந்தை உயிரிழந்த சம்பவம் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, 54 வயதுடைய குறித்த நபர், அதே பகுதியில் வசிக்கும் 12 வயது சிறுமியின் வீட்டிற்கு வழமையாகச் சென்று வந்துள்ளார்.
சம்பவம் இடம்பெற்ற நாளில், சிறுமியின் பெற்றோர் வீட்டில் இல்லாத சந்தர்ப்பத்தில், 12 வயது சிறுமியும் அவரது 10 வயது தோழியும் வீட்டில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது 12 வயது சிறுமி பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கப்பட்டதாகவும், 10 வயது சிறுமியிடம் முறையற்ற வகையில் நடந்துகொள்ள முயற்சித்ததாகவும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளது.
பின்னர், சம்பவம் குறித்து பாடசாலையில் பேசப்பட்டதையடுத்து அது ஆசிரியரின் கவனத்திற்கு சென்றுள்ளது. ஆசிரியர் இதுதொடர்பில் சிறுமியின் தாயாருக்கு அறிவித்ததையடுத்து, அவர் காத்தான்குடி பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை ஆரம்பித்த பொலிஸார், 54 வயதுடைய சந்தேகநபரை கைது செய்துள்ளனர். பாதிக்கப்பட்டதாகக் கூறப்படும் இரு சிறுமிகளும் மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதற்கிடையில், தனது மகளுக்கு நேர்ந்ததாகக் கூறப்படும் சம்பவத்தால் கடும் மனவேதனைக்குள்ளான 12 வயது சிறுமியின் தந்தை உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.





.jpg)






.jpeg)