
BookRetreats.com வெளியிட்டுள்ள State of Retreats 2026 அறிக்கையின்படி, 2026ஆம் ஆண்டிற்கான உலகின் அதிகம் கவனம் பெற்ற Wellness (ஆரோக்கிய & ஓய்வு) சுற்றுலா இலக்காக இலங்கை முதலிடத்தைப் பெற்றுள்ளது.
இந்த அறிக்கையின்படி, BookRetreats.com தளத்தில் இலங்கைக்கான தேடல்கள் கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 100% அதிகரித்துள்ளன. இதன் மூலம் அவுஸ்திரேலியா (85%), மொராக்கோ (83%), இங்கிலாந்து (82%) மற்றும் ஸ்பெயின் (80%) ஆகிய நாடுகளை இலங்கை பின்னுக்குத் தள்ளியுள்ளது.
இலங்கையின் ஆயுர்வேத மரபு, குறைந்த செலவில் கிடைக்கும் Wellness Retreats மற்றும் இயற்கை வளங்கள் இந்த முன்னேற்றத்திற்கான முக்கிய காரணங்களாக BookRetreats.com குறிப்பிட்டுள்ளது.
மேலும், கண்டியில் Wellness Retreats சுமார் 373 அமெரிக்க டொலரிலிருந்து தொடங்குகின்றன, இது ஐரோப்பிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் மிகவும் மலிவானதாகும் என்றும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல், 40 நாடுகளைச் சேர்ந்த சுற்றுலாப் பயணிகளுக்கான விசா கட்டண விலக்கு இலங்கையை மேலும் கவர்ச்சிகரமான Wellness சுற்றுலா தலமாக மாற்றியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
இலங்கையின் காட்டு யானைகளின் உலகின் மிகப்பெரிய கூட்டம், நீலத் திமிங்கலங்களை காணும் வாய்ப்பு மற்றும் ஆண்டு முழுவதும் ரசிக்கக்கூடிய கடற்கரைகள் ஆகியவையும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் முக்கிய அம்சங்களாக அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.












