தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்வரும் தேர்தல்களில் அரச ஊழியர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்டு, அரிசி விநியோகத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது என பத்தரமுல்ல சீலரத்ன தேரர் குற்றம் சாட்டியுள்ளார்.
கொழும்பில் சனிக்கிழமை (27) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் எதிர்வரும் தேர்தல்களில் அரச ஊழியர்களின் வாக்குகளைப் பெற்றுக்கொள்வதை இலக்காகக் கொண்டு, அரிசி விநியோகத் திட்டங்களை முன்னெடுத்து வருகின்றது. இந்த அரச ஊழியர்களுக்கு தலா 20 கிலோகிராம் அரிசியை எவ்வாறு அரசாங்கத்தால் வழங்க முடியும்? இவர்களுக்குப் பைத்தியம் பிடித்துள்ளது போலும். இவ்வாறான பைத்தியக்காரத்தனம் உலகத்தில் எங்குமே இல்லை.
நாட்டை ஆட்சிக்குக் கொண்டுவந்து, அரச ஊழியர்களுக்கு 20 கிலோகிராம் அரிசியை வழங்குவதற்கா அழகான, தூய்மையான, பெரும் பணக்கார இலங்கையைக் கட்டியெழுப்பப் போவதாகக் கூறி இவர்கள் அதிகாரத்துக்கு வந்தார்கள்? தற்போது இந்த நாடு அவ்வாறான நிலையை அடைந்துள்ளதா? அவ்வாறாயின் மக்களிடமிருந்து வசூலிக்கப்படும் வரிப்பணங்கள் எங்கே உள்ளன? வரிப்பணங்களுக்கு என்ன நேர்ந்தது? சர்வதேச நாணய நிதியத்திடமிருந்து பெற்றுக்கொண்ட பணத்துக்கு என்ன நடந்தது? ஏனைய கடனுதவி மூலம் பெறப்பட்ட நிதிகளுக்கு என்ன நடந்தது? அவை எதற்கும் பதிலில்லை.
அரசாங்கத்துக்கு அரச ஊழியர்களின் பசியைப் பற்றி மாத்திரமே கவலை உள்ளது. ஏழைக் கிராமங்களில் வாழும் ஏனைய மக்களுக்குப் பசி இல்லையா? அவர்கள் உணவு உண்பதில்லையா? அவர்கள் புண்ணாக்கா உண்கிறார்கள்?; தற்போதைய அரசாங்கம் அரச ஊழியர்களின் வாக்குகளைக் குறிவைத்து அரிசிச் சலுகைகளை வழங்கத் தொடங்கியுள்ளது. அரச ஊழியர்கள் அந்தளவுக்குப் பிச்சைக்காரர்கள் அல்லர்.
ஆனால் இந்த அரசாங்கம் அவர்களைக் கையேந்தி ஏந்திப் பிச்சையெடுக்கும் நிலைக்குத் தள்ளியுள்ளது. ஏழைக் கிராமங்களில் வாழும் மக்களின் வாழ்க்கையைக் கட்டியெழுப்புவதற்கும், விவசாயிகளிடமிருந்து நெல்லை அரசாங்கம் முறையான விலைக்குக் கொள்வனவு செய்து அவர்களுக்குத் தேவையான வசதிகளைச் செய்துகொடுப்பதற்கும் எந்தவொரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
தேசிய மக்கள் சக்தியினர் தங்களின் அகந்தையைத் தூக்கியெறிந்துவிட்டு மக்களின் உண்மையான பிரச்சினைகளைத் தீர்க்க முன்வர வேண்டும். இல்லையெனில் மக்கள் அனைவரும் வீதிக்கு இறங்கிப் போராடுவது நிச்சயம். அன்று கோட்டாபய ராஜபக்சவை வீட்டுக்குப் போகுமாறு கூறியதைப் போல, அநுர குமார திசாநாயக்கவையும் வீட்டுக்குப் போகுமாறு கூறி மக்கள் வீதிக்கு இறங்கும் காலம் வெகுதொலைவில் இல்லை. அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் என்னை பத்தரமுல்லே சீலரத்ன தேரர் என்று கூறவும் இடமளிக்க வேண்டாம் என்றார்.










.jpg)
.png)

