
கிழக்கு மாகாண சபைக்குட்பட்ட அம்பாறை மாவட்டத்திலுள்ள அனைத்து வைத்தியசாலைகளிலும் கடமையாற்றும் சுகாதார ஊழியர்கள் திங்கட்கிழமை (29) காலை முதல் 24 மணித்தியால அடையாள சுழற்சி முறையிலான நோய் விடுப்புப் போராட்டமொன்றை முன்னெடுக்கவுள்ளதாக ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
ஒன்றிணைந்த சுகாதார ஊழியர்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் தம்பிட்டியே சுகதானந்த தேரரினால் ஞாயிற்றுக்கிழமை (28) சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பியுள்ள கடிதத்திலே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுகாதார அமைச்சின் செயலாளருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்தக் கடிதத்தின் பிரதிகள், சுகாதார அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், கிழக்கு மாகாண ஆளுநர், கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், அம்பாறை மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர், அம்பாறை மாவட்டத்தின் அனைத்துச் சுகாதார நிறுவனங்களின் தலைவர்கள் மற்றும் அனைத்து ஊடக நிறுவனங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
எமது நியாயமான நீண்டகாலக் கோரிக்கைகளை அடிப்படையாகக் கொண்டு, கிழக்கு மாகாண சபைக்கு உட்பட்ட அம்பாறை மாவட்டத்தின் வைத்தியசாலைகளில் பணிபுரியும் எமது ஊழியர்கள் நாளை 29 ஆம் திகதி காலை 06.30 மணி முதல் 30 ஆம் திகதி காலை 06.30 மணி வரை பணிக்கு சமூகமளிக்காது நோய் விடுப்பு அறிக்கை செய்யும் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளனர்.
எமது ஊழியர்கள் அன்றாடம் எதிர்கொள்ளும் பிரதான பிரச்சினைகள் மற்றும் நீண்டகாலக் குறைகளைத் தீர்ப்பது குறித்து கலந்துரையாடுவதற்காக நாம் சுகாதார அமைச்சருக்கும் சுகாதார அமைச்சின் செயலாளருக்கும் இதுவரை 11 தடவைகள் எழுத்துப்பூர்வமாக கடிதங்கள் மூலம் அறிவித்திருந்தோம்.
எனினும், எமது கோரிக்கைகள் தொடர்பில் அமைச்சோ அல்லது அதிகாரிகளோ இதுவரை எந்தவொரு சாதகமான உத்தியோகபூர்வ நடவடிக்கையையோ அல்லது குறைந்தபட்ச பேச்சுவார்த்தைக்கான முறையானதொரு கலந்துரையாடலையோ வழங்கவில்லை என்பது வருத்தத்துக்குரியதாகும்.
தற்போதும் கூட இந்த சிக்கல்களுக்குப் பேச்சுவார்த்தை மூலம் சுமுகமான தீர்வை எட்டுவதற்கு எமது சங்கம் முழுமையான தயாராகவே உள்ளது என்பதை மீண்டும் அதிகாரிகளுக்கு வலியுறுத்திக் கூறுகின்றோம். எமது நியாயமான கோரிக்கைகளுக்கு உரிய அதிகாரிகள் விரைந்து தீர்வு வழங்கத் தவறும் பட்சத்தில், இந்தத் தொழிற்சங்க போராட்டத்தை மேலும் தீவிரப்படுத்த நேரிடும் என எச்சரிக்கின்றோம்.
இப்போராட்டத்தின் போது எம்மால் முன்வைக்கப்பட்டுள்ள பிரதான கோரிக்கைகள் :
அரசாங்கத்தின் பொது விடுமுறை நாட்களுக்கான கொடுப்பனவுகளை மீண்டும் ஊழியர்களுக்கு வழங்குதல்.
தற்போது உள்ள அனைத்துப் பதில் கடமைப் நியமனங்களையும் உடனடியாக நிரந்தரப் பதவிகளாக மாற்றுதல்.
ஊழியர்களுக்கான பதவியுயர்வு நடைமுறைகளை எவ்வித தாமதமுமின்றி முறைப்படுத்துதல்.
அரசாங்கத்தினால் ஏற்கனவே வாக்குறுதி அளிக்கப்பட்ட 5 நாட்கள் கொண்ட வேலை வார முறையை உடனடியாக நடைமுறைப்படுத்துதல்.
சுகாதாரத் துறையில் நிலவும் அனைத்துப் பணியாளர் வெற்றிடங்களுக்கும் புதிய ஊழியர்களை உடனடியாகப் பெற்றுக் கொள்ளுதல்.
மேலதிக நேரக் கொடுப்பனவு வீதத்தை 1/160 ஆக கணிப்பிட்டு வழங்குவதை உறுதி செய்தல் என்பனவாகும்.










.jpg)
.png)

