மட்டக்களப்பில் இந்த ஆண்டின் முதல் டெங்கு மரணம் – பிரசவத்திற்குப் பிறகு 28 வயது தாய் உயிரிழப்பு !


மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் டெங்கு காய்ச்சல் காரணமாக அனுமதிக்கப்பட்ட 28 வயதுடைய கர்ப்பிணிப் பெண் ஒருவர், அண்மையில் பெண்குழந்தையை பெற்றெடுத்த நிலையில், நோய் நிலை ஏற்பட்டு, நேற்று வியாழக்கிழமை (25) இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் இந்த ஆண்டில் பதிவான முதலாவது டெங்கு மரணம் இதுவாகும் என போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் கணேசலிங்கம் கலாரஞ்சினி தெரிவித்தார்.

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இன்று வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்த விபரங்களை வெளியிட்டார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் மகப்பேறு விசேட வைத்திய நிபுணர் சி. சரவணன் உள்ளிட்ட விசேட வைத்திய நிபுணர்கள் மற்றும் மயக்க மருந்து விசேட வைத்திய நிபுணர்கள் கலந்துகொண்டிருந்தனர்.

இச்சம்பவம் குறித்து வைத்தியசாலை பணிப்பாளர் மேலும் தெரிவிக்கையில்,

வாழைச்சேனை, பேத்தாழை பிரதேசத்தைச் சேர்ந்த 28 வயதுடைய நிறைமாத கர்ப்பிணிப் பெண் ஒருவர் கடந்த 17ஆம் திகதி காய்ச்சல் காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.

பரிசோதனைகளின்போது அவருக்கு டெங்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதையடுத்து, கடந்த 18ஆம் திகதி அவர் தீவிர சிகிச்சைப் பிரிவுக்கு (ICU) மாற்றப்பட்டு, அங்கு அவருக்கு விசேட வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், கடந்த 21ஆம் திகதி அவர் சுகப்பிரசவம் மூலம் ஆரோக்கியமான பெண் குழந்தை ஒன்றைப் பெற்றெடுத்தார்.

எனினும், பிரசவத்தின் பின்னர் அவருக்குத் தொடர்ந்து இரத்தப்போக்கு ஏற்பட்டதால், சுமார் 12 அலகுகள் (Pints) இரத்தம் ஏற்றப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.

இருப்பினும், டெங்கு நோய் தீவிரமடைந்ததால் அவரது இதயம், மூளை மற்றும் சிறுநீரகம் உள்ளிட்ட முக்கிய உறுப்புகள் செயலிழந்த நிலையில், நேற்று வியாழக்கிழமை இரவு 10 மணியளவில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் வாழைச்சேனை, பேத்தாழை பகுதியைச் சேர்ந்த ஒரு குழந்தையின் தாயாரும் பட்டதாரியுமான 28 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார் என்றார்.