கட்டுநாயக்கவில் 39 இலட்சத்திற்கும் அதிக பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது!


கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தினூடாக சட்டவிரோதமான முறையில் நாட்டுக்குள் கொண்டுவரப்பட்ட, 39 இலட்சத்து 90 ஆயிரம் ரூபாய் பெறுமதியான வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் இலங்கை பயணி ஒருவர் விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இன்று சனிக்கிழமை (13) அதிகாலை 03.30 மணியளவில் ஷார்ஜாவிலிருந்து ஏயார் அரேபியா விமான சேவைக்கு சொந்தமான ஜி- 9587 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்டவர் கொட்டாரமுல்லை பகுதியைச் சேர்ந்த 40 வயதுடைய வர்த்தகர் ஒருவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர் கொண்டு வந்த இரண்டு பயணப் பொதிகளிலிருந்து சட்டவிரோதமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த மென்செஸ்டர் மற்றும் பிளாட்டினம் ரகங்களைச் சேர்ந்த 26,600 வெளிநாட்டு சிகரெட்டுகள் அடங்கிய 133 சிகரெட் கார்ட்டூன்கள் கைப்பற்றப்பட்டுள்ளன.

தற்போது பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ள சந்தேகநபர், கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையுடன் மேலதிக விசாரணைகளுக்காக எதிர்வரும் 16ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.