
கிழக்கு பல்கலைக்கழக முன்னாள் உபவேந்தர் பேராசிரியர் சுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு காணாமல் போன சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் அடிப்படையில் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியின் தலைவரும் முன்னாள் இராஜாங்க அமைச்சருமான பிள்ளையான் என அழைக்கப்படும் சி.சந்திரகாந்தனை குற்றப்புலனாய்வு பிரிவினர் மட்டக்களப்பில் உள்ள அவரது காரியாலயத்தில் வைத்து கடந்த 2025 ஏப்ரல் 7ஆம் திகதி கைது செய்திருந்தனர்.
2006ஆம் ஆண்டு கல்லடி பிரதேசத்தில் கடமையில் இருந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் சுட்டுக் கொலை செய்யப்பட்டமை, கப்பம் கோரப்பட்ட பணத்தை வழங்க மறுத்த வர்த்தகர் ஒருவரை கொடூரமாகக் கொலை செய்தமை, கட்சி உறுப்பினர் ஒருவரை சுட்டு படுகொலை செய்தமை, கடந்த 2006ஆம் ஆண்டு டிசம்பர் 15ஆம் திகதி கொழும்பில் வைத்து கிழக்கு பல்கலைக்கழகத்தின் அப்போதைய உபவேந்தர் பேராசிரியர் சிவசுப்பிரமணியம் ரவீந்திரநாத் கடத்தப்பட்டு, காணாமல் ஆக்கப்பட்டமை போன்ற சம்பவங்கள் தொடர்பில் பிள்ளையான் மீதும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளாக செயற்பட்டு வந்த காத்தான்குடியை சேர்ந்த முகமட் சிபான், மற்றும் முகமட் சகீத் ஆகியோர் கடந்த 2025 நவம்பர் மாதம் சி.ஐ.டி.யினரால் கைது செய்யப்பட்டிருந்தனர்.
கைது செய்யப்பட்டு பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்த பிள்ளையான் மற்றும் இராணுவ புலனாய்வு பிரிவின் தகவலாளிகளான இருவர் உட்பட 3 பேர் மீது வழக்கு தாக்கல் செய்த விபரங்கள் அடங்கிய விசேட அறிக்கை நேற்று மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் சமர்ப்பிக்கப்பட்டது.
பிள்ளையான் தவிர்ந்த ஏனைய இருவரும் பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர்.
இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்துக்கொண்ட நீதவானிடம் சிஐ.டி.யினர் பிள்ளையானின் பாதுகாப்பு காரணமாக அவரை அழைத்து வரவில்லை என்று தெரிவித்ததுடன் இதில் தொடர்புபட்ட ஒருவர் இறந்துள்ளதாகவும் மற்றொருவர் வெளிநாட்டில் இருப்பதாகவும் அறிவித்தனர். இதனையடுத்து பிள்ளையானை சூம் இணையவழி ஊடாக விசாரணை மேற்கொண்ட நீதவான் மூவரையும் எதிர்வரும் 30ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை பிள்ளையான் மற்றும் அவரது குழுவினருக்கு எதிராக இந்த வழக்கு தொடர்பான விபரங்கள் ஏற்கனவே கல்கிஸ்ஸ நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, அவர் தற்பொழுது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்து.







.jpeg)
.jpeg)



