
தற்போதைய அரசாங்கம் போலியான வாக்குறுதிகளையும் பொய்களையும் கூறி அதிகாரத்தைக் கைப்பற்றிய போதிலும், குறுகிய காலத்துக்குள் நாட்டின் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விவசாயிகள், மீனவர்கள் என ஒட்டுமொத்த பொதுமக்களையும் முற்றாக ஏமாற்றிவிட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச குற்றம் சுமத்தியுள்ளார்.
கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் செவ்வாய்கிழமை (16) இடம்பெற்ற அபிவிருத்தி உத்தியோகத்தர்களுடனான விசேட கலந்துரையாடலின் போதே அவர் இதனைத் தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
நாட்டில் உள்ள 15,000 இற்கும் மேற்பட்ட அபிவிருத்தி மற்றும் பொருளாதார அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்கான முறையான சேவைப் பிரமாணக் குறிப்பு, நியாயமான சம்பள அளவு அல்லது பதவி உயர்வு முறைமைகள் இதுவரை உருவாக்கப்படவில்லை. இலவசக் கல்வியின் ஊடாகப் பட்டம் பெற்ற இப்பட்டதாரிகளை, அவர்களை விடக் குறைந்த தகைமை கொண்டவர்கள் கண்காணிக்கும் அவல நிலை காணப்படுகிறது. இவர்களின் பெயர்களை 'சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர்' என மாற்றி தேர்தல் காலத்தில் ஏமாற்றியுள்ளனர். இந்த அநீதிக்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து போராடுவதுடன், அடுத்த வாரம் நாடாளுமன்றத்தில் இவர்களது உரிமைகளுக்காக நான் குரலெழுப்புவேன்.
சிரேஷ்ட பிரஜைகளின் சேமிப்புகளுக்கான 15 சதவீத வட்டி வீதம் தற்போது பறிக்கப்பட்டுள்ளது. மேலும், விவசாயிகளுக்கான உரம், விதை மானியங்கள் மற்றும் உத்தரவாத விலைகள் வழங்கப்படாமையினால் அவர்கள் நிர்க்கதியாகியுள்ளனர். மீனவர்களுக்கான சலுகைகள் குறைக்கப்பட்டுள்ளன. பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ள தற்போதைய சூழலில், ஒரு மாதத்திற்கு வாழ்வதற்கு 17,000 ரூபா போதுமானது எனக் கூறி அரசாங்கம் மக்களைத் திசைதிருப்புகிறது. இதனால் நாட்டில் வறுமையும் மந்தபோஷணமும் அதிகரித்துள்ளது.
துறைமுக இறக்குமதி விலைக்கு எரிபொருள் வழங்குவோம் என்ற வாக்குறுதி, மின்சாரக் கட்டணத்தை 33 வீதத்தால் குறைப்பதாகக் கூறியமை மற்றும் அனர்த்தங்களினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தலா 10 இலட்சம் ரூபா நிதியுதவி வழங்குவதாகக் குறிப்பிட்டமை என எதனையும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை. தமக்குச் சாதகமான மக்கள் கருத்தை உருவாக்குவதற்குச் சமூக ஊடகங்களை அரசாங்கம் சூசகமாகப் பயன்படுத்தி வருகிறது. பொய்களைக் கூறி ஜனாதிபதிப் பதவியையும் 2ஃ3 பெரும்பான்மையையும் பெற்றாலும் அந்தப் பொய்களுக்கு நீண்ட ஆயுள் இருக்காது. மக்கள் தற்போது உண்மையான மாற்று வழி ஐக்கிய மக்கள் சக்தியே என்பதைப் புரிந்துகொண்டுள்ளனர் என்றார்.







.jpeg)




