கல்வி மற்றும் பொருளாதார சீர்திருத்தங்கள் இன்றியமையாதவை; நாட்டின் போட்டித்திறனை வலுப்படுத்த வேண்டும்


 கல்வித் துறையில் நிலவும் கட்டமைப்பு ரீதியான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கும், முதலீட்டிற்கு சாதகமான சூழலை உருவாக்குவதற்கும் இலங்கையின் பொருளாதார வளர்ச்சியையும் சர்வதேச போட்டித்திறனையும் வலுப்படுத்துவது மிக அத்தியாவசியமானது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

அவுஸ்திரேலியா சர்வதேச விவகாரங்கள் நிறுவனத்தின் விக்டோரியா கிளையால் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கைக்கான ஆய்வுப் பயணத்தில் ஈடுபட்டுள்ள பிரதிநிதிகள் குழுவினர், கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் சஜித் பிரேமதாசவைச் சந்தித்துக் கலந்துரையாடினர். இச்சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இலவசக் கல்வியும் இலவச சுகாதார சேவையும் இலங்கை நலன்புரி அரசின் முக்கிய அடித்தளமாக விளங்கினாலும், தற்போதைய கல்வி முறை கடுமையான சவால்களை எதிர்கொண்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சுட்டிக்காட்டினார். இதன் போது மேலும் கருத்து வெளியிட்ட அவர்,

தற்போதைய கல்வி முறைமையானது ஆண்டுதோறும் தொழில் சந்தையின் தேவைகளுக்குப் பொருந்தாத, வேலைவாய்ப்பு பெறுவதில் சிரமங்களை எதிர்கொள்ளும் ஆயிரக்கணக்கான பட்டதாரிகளையே உருவாக்கி வருகின்றது.

மனப்பாடம் செய்யும் கல்வி முறை, பாடசாலை பாடத்திட்டங்களில் காணப்படும் பொருத்தப்பாடின்மை மற்றும் மொழி உரிமைகள் அரசியல்மயமாக்கப்பட்டிருப்பது ஆகியன கல்வித் துறையைப் பெரிதும் பாதித்துள்ளன.

நாட்டில் 10,000க்கும் மேற்பட்ட பாடசாலைகள் இருந்தாலும், தேசிய மற்றும் முன்னணி பாடசாலைகள் மாத்திரமே அதிக வளங்களையும் வசதிகளையும் அனுபவிக்கின்றன. பெரும்பாலான பாடசாலைகள் இன்னும் குறைந்த வசதிகளுடனேயே இயங்குகின்றன.

நலன்புரி அரசின் நோக்கம் ஏற்றத்தாழ்வுகளை குறைப்பதாக இருந்தாலும், தற்போதைய முறைமைக்குள் அந்த ஏற்றத்தாழ்வுகள் மேலும் விரிவடைந்துள்ளன.

நிலைபேண்தகு அபிவிருத்தி மற்றும் ஆட்சிமுறையின் மீதான மக்கள் நம்பிக்கையை உறுதி செய்வதற்காக, கொள்கைசார் ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன வலுவூட்டல் அவசியமாகும்.

அத்துடன் ஜனநாயக ஆட்சிமுறை, பொருளாதார ஸ்திரத்தன்மை, சமூக நல்லிணக்கம் மற்றும் சாதகமான சர்வதேச உறவுகள் ஆகியன நாட்டின் வளர்ச்சிக்கு மிக முக்கிய தூண்களாகும் என்றார்.