பாராளுமன்றத்திற்கு குண்டுத்தாக்குதல் நடத்தியவர்கள் இன்று ஒழுக்கம் பற்றி பேசுகிறார்கள் - பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர
அரசியல் கட்சியின் செயற்பாட்டாளர்களாக செயற்பட்ட சானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் பொலிஸ் சேவைக்கு அரசியல் பரிந்துரையுடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்னர் இவ்வாறு ஒன்றும் இடம்பெறவில்லை. இதனையே தவறு என்று நாங்கள் குறிப்பிடுகிறோம். இவர்களிடம் எங்களுக்கு தனிப்பட்ட பகைமை ஏதும் கிடையாது. பாராளுமன்றத்துக்கு குண்டுத்தாக்குதல் நடத்தியவர்கள் பாராளுமன்ற ஒழுக்கம் பற்றி பேசுவது வேடிக்கையாக உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டார்.
பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெற்ற இலங்கை மின்சார சட்டத்தின் கீழான கட்டளைகள் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் பணிப்பாளர் சானி அபேசேகர, பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன, சட்டமா அதிபர் திணைக்களத்தின் பிரதி சொலிசிட்டர் ஜெனரால் திலிப பீரிஸ், இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகம் ரங்க திஸாநாயக்க ஆகியோரை எதிர்க்கட்சியினர் எதிரிகளாக பார்க்கிறார்கள். குற்றச்சாட்டுக்களை முன்வைக்கிறார்கள் என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார்.
நாங்கள் எவரையும் எதிரிகளாக பார்க்கவில்லை. ஜனாதிபதி தான் எதிர்க்கட்சியினரை எதிரிகளாக பார்க்கிறார். சானி அபேசேகர தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டு அரசியலில் ஈடுபட்டவர். தான் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர் என்று அவர் உயர்நீதிமன்றத்துக்கு சத்தியக்கடதாசி ஊடாக அறிவித்துள்ளார். பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவும் அவ்வாறே உயர் நீதிமன்றத்துக்கு அறிவித்துள்ளார்.
அரசியல் கட்சியின் செயற்பாட்டாளர்களாக செயற்பட்ட சானி அபேசேகர, ரவி செனவிரத்ன ஆகியோர் பொலிஸ் சேவைக்கு அரசியல் பரிந்துரையுடன் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளார்கள். இதற்கு முன்னர் இவ்வாறு ஒன்றும் இடம்பெறவில்லை. இதனையே தவறு என்று நாங்கள் குறிப்பிடுகிறோம். இவர்களிடம் எங்களுக்கு தனிப்பட்ட பகைமை ஏதும் கிடையாது.
இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் ரங்க திஸாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியின் செயற்பாட்டு குழு உறுப்பினராவார். அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. ஆனால், இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.
பாராளுமன்றத்தின் ஒழுக்கம் பற்றி ஜனாதிபதி பேசுகிறார். பாராளுமன்றத்துக்கு குண்டுத்தாக்குதல் நடத்தியவர்கள் பாராளுமன்றத்தின் கௌரவத்தை பாதுகாக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறார்கள். செங்கோலின் கௌரவம் எமக்கு நன்கு தெரியும். நீதித்துறையில் அரசியல் ஆதிக்கம் தீவிரமடைந்துள்ளதை சுட்டிக்காட்டி அவசர விவாதம் கோரினோம். சபாநாயகர் பெலவத்த கட்சி காரியாலயத்துக்கு அமைவாகவே செயற்படுகிறார்.அவர் எமக்கு போதிய நேரம் வழங்குவதில்லை. அவரின் முறையற்ற செயற்பாடுகளினால் தான் பாராளுமன்ற கௌரவம் அவமதிக்கப்படுகிறது.
உயர்நீதிமன்றத்தில் 17 நீதியரசர்கள் உள்ள நிலையில் தற்போது 12 நீதியரசர்கள் மாத்திரமே உள்ளார்கள். மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் 4 நீதியரசர்களுக்கான வெற்றிடம் காணப்படுகிறது. இதனையே நாங்கள் குறிப்பிட்டோம். கீழ் நிலை நீதிமன்றங்களுக்கான நியமனங்களை வழங்காமல் நீதியரசர்களை நியமிக்க முடியாது என்று ஜனாதிபதி குறிப்பிடுகிறார். இரண்டு மாகாண ஆளுநர்களின் பிள்ளைகளை நீதவான்களாக நியமிப்பதற்காகவே இந்த தாமதம் திட்டமிட்ட வகையில் ஏற்படுத்தப்படுகிறது.
பிரதம நீதியரசரின் பதவிக்காலத்தையும் நீட்டிப்பதற்கு அரசாங்கம் உத்தேசித்துள்ளது. முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தற்போதைய நீதியரசர் பீர்த்தி பத்மன் சூரசேனவை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமித்தார்.
2018ஆம் ஆண்டு அரசியல் நெருக்கடியின்போது அப்போதைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன எடுத்த தீர்மானம் தவறு என்று பீர்த்தி பத்மன் சூரசேன தீர்ப்பளித்தார். அதேபோல் மைத்திரிபால சிறிசேனவின் மலலசேகர வீட்டு வழக்கிலும் அவர் மைத்திரிபாலவுக்கு எதிராகவே தீர்ப்பளித்தார். ஆகவே இந்த அரசாங்கத்துக்கு எதிராகவும் பிரதம நீதியரசர் செயற்படுவார் என்பதை தெளிவாக குறிப்பிட்டுக்கொள்கிறேன் என்றார்.













