வவுனியாவில் போதைப் பொருளை கடத்திச்சென்ற சந்தேகநபர் கைது!


வவுனியா லக்சபானா வீதிக்கு அண்மையில் 21 கிலோ 600 கிராம் கேரள கஞ்சா போதைப் பொருளை கடத்திச்சென்ற ஒருவரை வியாழக்கிழமை (25) கைது செய்துள்ளதாக வவுனியா பொலிஸார் தெரிவித்தனர்.

வவுனியா பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலையடுத்து கிளிநொச்சியில் இருந்து வவுனியா நோக்கி வந்த காரில் கொண்டுவரப்பட்ட கஞ்சாவினை மற்றொரு முச்சக்கரவண்டிக்கு மாற்றமுற்றப்பட்ட போதே சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதன்போது கஞ்சாவினை உடமையில் வைத்திருந்த ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ள நிலையில் மேலும் இருவர் தப்பிச்சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து பொதி செய்து மறைத்து வைக்கப்பட்டிருந்த 21கிலோ600 கிராம் கேரள கஞ்சாவினை பொலிஸார் மீட்டுள்ளதுடன், வாகனத்தையும், முச்சக்கவண்டியையும் பொலிஸ்நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

குறித்த கைதுநடவடிக்கை வவுனியா தலைமை பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி சிரேஸ்ட பொலிஸ் பரிசோதகர் தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவின் பொறுப்பதிகாரி உட்பட்ட பொலிஸ் குழுவால் மேற்கொள்ளப்பட்டது.

மீட்கப்பட்ட கஞ்சாவின் பெறுமதி ஒரு கோடி ரூபாய் இருக்கலாம் என பொலிஸார் தெரிவித்ததுடன் கைது செய்யப்பட்டவர்கள் தடுப்புக்காவல் உத்தரவின் கீழ் விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.