
போதைப்பொருள், போதை வஸ்துகள் மற்றும் விசப் பொருட்களின் பயன்பாட்டை நாட்டிலிருந்து முற்றாக ஒழிக்க வேண்டும் என்ற கொள்கையில் ஐக்கிய மக்கள் சக்தி உறுதியாக இருக்கின்றது. இத்தகைய குற்றங்களுடன் தொடர்புடைய எந்தவொரு நபருக்கும் ஐக்கிய மக்கள் சக்தியில் இடமில்லை. அதேநேரம் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு சிங்கப்பூரில் வழங்கும் தண்டனை வழங்கப்பட வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (25) நடைபெற்ற போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,
போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடும் நபர்கள் மற்றும் குழுக்களின் பெயர்களைக் கூறி அதற்கு எதிராக எதிர்க்கட்சி செயல்படுகிறது என்று ஜனாதிபதி கூறிய கதை தவறானது. நீதியை நிலைநாட்டும் நடவடிக்கை மற்றும் சட்டத்தின் ஆட்சியின்படி சாத்தியமான அனைத்தையும் செய்து போதைப்பொருளை இல்லாதொழிக்குமாறு ஜனாதிபதியிடம் கேட்டுக்கொள்கிறேன். இந்த போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்களுக்கு சிங்கப்பூரைப் போன்ற கடுமையான தண்டனைகளைப் பெற்றுக் கொடுங்கள்.
இராணுவத்தைப் பாதுகாத்து தேசிய பாதுகாப்புக்காக முன்நிற்பதாக ஜனாதிபதி கூறினாலும், இன்று சரத் பொன்சேகாவுக்கு அமெரிக்கா செல்ல முடியாது. சவேந்திர சில்வாவுக்கு சில நாடுகளுக்குச் செல்ல முடியாது. இதற்கு எதிராக அரசாங்கம் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எக்னலிகொட, லசந்த மற்றும் தாஜுதீன் ஆகியோரைக் கொலை செய்தவர்கள் நிச்சயமாகக் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும். ஊடக நிறுவனங்களை தீ வைத்தவர்கள் மற்றும் ஊடகவியலாளர்களைத் தாக்கியவர்கள் நிச்சயமாகக் கைது செய்யப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும்.
உயர் நீதிமன்ற நீதியரசர்களின் ஓய்வுபெறும் வயதை சட்டவிரோதமான முறையில் கூட்டும் நடவடிக்கைக்கே எதிர்க்கட்சி எதிர்ப்புத் தெரிவித்தது. கீழ் நீதிமன்றங்கள் மூடப்பட்டு அங்கு நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் இந்த புதிய நியமனங்களைச் செய்ய முடியாது என்று ஜனாதிபதி கூறினாலும், உயர் நீதிமன்றங்களில் இன்னும் 8 பதவிகள் வெற்றிடமாக காணப்படுகின்றன. இந்த வெற்றிடங்களை நிரப்ப வேண்டும் .
அதேநேரம் சபாநாயகர் நிலையியற் கட்டளைகளுக்கு முரணாகச் செயற்பட்டு எதிர்க்கட்சியினரின் வாய்களை மூடி, பாராளுமன்றத்தில் பேசும் சுதந்திரத்தை இல்லாதொழிப்பது நாகரீகமான செயலா எனக் கேட்கிறோம். தப்புச் செய்பவர்களுக்கு தண்டனை வழங்கி சட்ட நடவடிக்கைகள் முறையாக எடுக்கப்பட வேண்டும். இந்த நச்சுப் போதைப்பொருள் உட்பட ஒட்டுமொத்த போதைப்பொருள் பயன்பாட்டையும் நாட்டிலிருந்து ஒழிப்பதே நாட்டுப் பொதுமக்களின் எதிர்பார்ப்பைப் போன்றே எதிர்க்கட்சியின் எதிர்பார்ப்புமாகும். இதற்காக எடுக்கப்படும் நடவடிக்கைகள் குறித்து எந்த விமர்சனமும் இல்லை.
மேலும், இலவசக் கல்வியின் கீழ் காணப்படும் பாடசாலைக் கட்டமைப்பு மற்றும் இளைய தலைமுறையினரைக் கூட இந்த போதைப்பொருள் அரக்கன் ஆக்கிரமித்துள்ளது. இந்த போதைப்பொருள் கடத்தல்காரர்களைக் கைது செய்து, வரி செலுத்துவோரின் பணத்தில் அவர்களைச் சிறையில் அடைத்து பராமரித்து, அந்தச் சிறையிலிருந்துகொண்டே மீண்டும் இந்த கடத்தல்களைச் செய்வதற்குத் தேவையான வழிகளை உருவாக்க இடமளிக்கக் கூடாது. இப்போதாவது சிங்கப்பூரில் காணப்படும் தண்டனை முறையை போதைப்பொருள் கடத்தல்காரர்களுக்குச் நடைமுறைப்படுத்த வேண்டும்.
மேலும் ஜனநாயகத்தைப் பாதுகாப்பதாகக் கூறினாலும், 2 வருடங்கள் கடந்தும் இன்னும் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் நிகழ்நிலை காப்புச் சட்டம் என்பன நீக்கப்படவில்லை. மக்களின் சுதந்திரமான கருத்துக்குள் அனைத்துக் கட்சிகளின் பிரதிநிதித்துவத்தையும் கொண்ட சிவில் பாதுகாப்புக் குழுக்களுக்கான உறுப்பினர்கள் ஜே.வி.பி கட்சியின் அலுவலகச் சீட்டு மூலமே நியமிக்கப்படுகிறார்கள். இது இளைஞர் கழகங்களிலும் கூட நடைமுறையில் காணப்படுகின்றன. அரகலய போராட்டத்திற்குப் பின்னர் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வைக் குழுக்களில் 50 க்கும் மேற்பட்ட இளைஞர், யுவதிகள் அங்கத்துவம் வகித்த போதிலும், இன்று அவர்களும் நீக்கப்பட்டுள்ளனர். பிரஜா சக்தி குழுக்களில் கூட உறுப்பினர்கள் அரசியல் நியமனங்களாகவே நியமிக்கப்படுகிறார்கள் என்றார்.












