நாட்டின் பல பாகங்களுக்கு பலத்த காற்று தொடர்பில் எச்சரிக்கை - வளிமண்டலவியல் திணைக்களம்


 நிலவி வரும் இயங்குநிலை தென்மேற்குப் பருவப் பெயர்ச்சி நிலைமையினால் நாட்டின் பல மாகாணங்களுக்கும் திருகோணமலை மாவட்டத்திற்கும் மணித்தியாலத்துக்கு 40-50 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தால் இன்று (29) முற்பகல் 11.00 மணிக்கு வெளியிடப்பட்டுள்ள இந்த விசேட 'ஆம்பர்' நிறத்திலான ஆலோசனை அறிக்கை, நாளை ( 30) முற்பகல் 11.00 மணி வரை செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கு மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மத்திய மாகாணம், தெற்கு மாகாணம், வடமத்திய மாகாணம், வடமேற்கு மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டம் அவ்வப்போது பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது:

இந்த மோசமான வானிலை காரணமாகப் பின்வரும் பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது:

வீடுகளின் கூரை ஓடுகள் மற்றும் தகரங்களுக்குச் சேதங்கள் ஏற்படலாம்.

மின்சார மற்றும் தொலைத்தொடர்பு கம்பிகள் அறுந்து விழ வாய்ப்புள்ளது.

மரக் கிளைகள் முறிந்து விழலாம், அத்துடன் பெரிய மரங்கள் வேருடன் சாயக்கூடிய அபாயம் காணப்படுகிறது.

நெல் வயல்கள், வாழை மற்றும் பப்பாசித் தோட்டங்கள் உள்ளிட்ட பழத் தோட்டங்களுக்குச் சேதங்கள் ஏற்படலாம்.

துறைமுகங்களில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள படகுகளுக்குச் சேதங்கள் ஏற்படக்கூடும்.

கரையோரப் பகுதிக்கு அண்மையிலுள்ள தாழ் நிலப் பிரதேசங்களுக்குள் கடல் நீர் உட்புகும் அபாயம் உள்ளது.

அனர்த்தங்களைத் தவிர்க்க பொதுமக்கள் பின்வரும் பாதுகாப்பு நடவடிக்கைகளைப் பின்பற்றுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்:

சேதமடைந்த கூரை ஓடுகள் அல்லது தகடுகளால் ஏற்படக்கூடிய விபத்துகள் குறித்து அவதானமாக இருக்கவும்.

வீதிகளில் விழுந்து கிடக்கக்கூடிய மரங்கள் மற்றும் மின்கம்பிகள் குறித்து மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்படவும்.

அவசர உதவிகள் தேவைப்படின், உடனடியாக உங்கள் பிரதேச அனர்த்த முகாமைத்துவ அதிகாரிகளைத் தொடர்பு கொள்ளவும்.

வளிமண்டலவியல் திணைக்களத்தால் இனிவரும் காலங்களில் வழங்கப்படும் உத்தியோகபூர்வ வானிலை முன்னறிவிப்புகள் மற்றும் அறிக்கைகள் குறித்துத் தொடர்ந்து அவதானமாக இருக்கவும்