இராஜாங்கனை சத்தாரதன தேரரைத் தாக்கி கொள்ளை - சந்தேகநபர் கைது
அநுராதபுரம் ராஜாங்கனை பகுதியில் வசிக்கும் சத்தாரதன தேரரைத் தாக்கி அவரது மடிக்கணினி மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையடித்துச் சென்ற சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரான கார் சாரதியை அநுராதபுரம் தலைமையக பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸார் கைது செய்துள்ளனர்.
தாக்குதலுக்குள்ளான தேரர் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது கிடைத்த தகவலுக்கு அமைய, சந்தேகநபர் நேற்று (15) மாலை ஹோமாகம பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார். சம்பவத்தில் பயன்படுத்தப்பட்டதாகக் கூறப்படும் காரையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கொடகம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடையவர் என ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதேவேளை, சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் இரு சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கடந்த 13ஆம் திகதி இரவு சுமார் 11 மணியளவில், வதாகம சிராவஸ்திபுர பகுதியில் அமைந்துள்ள தேரரின் விஹாரை வதிவிடத்துக்குள் நுழைந்த இனந்தெரியாத இருவர், தேரரைத் தாக்கிய பின்னர் அவரது மடிக்கணினி மற்றும் இரண்டு கையடக்கத் தொலைபேசிகளை கொள்ளையடித்துச் சென்றிருந்தனர் என பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபரை அநுராதபுரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அநுராதபுரம் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.








.jpeg)




