சூப்பர் எல் நினோ’ குறித்து சஜித் பிரேமதாச எச்சரிக்கை!


 பாராளுமன்றத்தில் நேற்று (12) உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, எல் நினோ காலநிலை மாற்றம் காரணமாக இலங்கை பெரும் ஆபத்தை எதிர்கொண்டுள்ளதாக எச்சரித்துள்ளார்.

இது தொடர்பாக அவசர நடவடிக்கை எடுப்பதற்காக உடனே "ஜனாதிபதி செயலணி" ஒன்றை ஸ்தாபிக்க வேண்டும் என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

பசுபிக் பெருங்கடலின் வெப்பநிலை 2.3 செல்சியஸ் அளவு உயர்ந்து வருவதால், கடந்த 1997-1998, 2015 மற்றும் 2016 ஆண்டுகளில் ஏற்பட்ட பேரழிவுகளுக்கு இணையான "சூப்பர் எல் நினோ" ஒன்று இலங்கையை பாதிப்பதற்கு 63% சாத்தியக்கூறுகள் உள்ளதாக சர்வதேச நிறுவனங்கள் எச்சரித்துள்ளன.

இவ்வாண்டின் ஜூலை–ஓகஸ்ட் மாதங்களிலும், ஆண்டின் இறுதியிலும் கடுமையான வறட்சி, காலமற்ற வெள்ளம் மற்றும் நிலச்சரிவு போன்ற இரு கட்ட பாதிப்புகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

பருவமழை குறைவதால் விவசாயம், உணவுப் பாதுகாப்பு மற்றும் நீர்மின் உற்பத்தி பாதிக்கப்படும். மின்சாரக் கட்டமைப்பு முடங்குவதோடு, நகர்ப்புற மற்றும் கிராமப்புறங்களில் உணவு விலைகள் கணிசமாக அதிகரிக்கும். மேலும், கடல் வெப்பநிலை உயர்வதால் பவளப்பாறைகள் அழிந்து, கடலோர மீன்பிடித் தொழிலும் பாதிக்கப்படும்.

நீர்நிலைகள் வற்றுவதால் மனித-யானை மோதல்கள் அதிகரிப்பதுடன், சிறுத்தைகளில் 60-70% வரையானவை இந்த கடுமையான காலநிலை மாற்றத்தால் பாதிக்கப்படலாம்.

நாட்டின் மேக்ரோ மற்றும் நுண் பொருளாதார தரவுகளின்படி, 2027 மார்ச் மாதத்தில் IMF ஒப்பந்தம் முடிவடைந்ததும், 2028 இல் அதிகளவிலான டொலர் கடனை செலுத்த வேண்டிய நிலை ஏற்படும். இதனால் நாட்டில் கடுமையான பொருளாதார உறுதியற்ற தன்மை உருவாகும் என எச்சரித்த அவர், மக்களுக்கு சுமை ஏற்படுத்தாத புதிய மாற்று ஒப்பந்தத்திற்கு செல்ல வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

சர்வதேச சிறுவர் தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு பேசிய அவர், 2018 முதல் 2024 வரை இலங்கையில் 260,000 சிறுவர்கள் பாடசாலை கல்வியைக் கைவிட்டுள்ளனர் என்றும், வருடாந்தம் 20,000 சிறுவர்கள் கல்வியை நிறுத்துகின்றனர் என்றும் கவலை வெளியிட்டார். பிள்ளைகளின் கல்வி மற்றும் ஆரோக்கியத்தைப் பாதுகாக்க விசேட சாசனம் ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

அரசாங்கம் எதிர்க்கட்சியின் ஆக்கப்பூர்வமான கருத்துக்களை கேலி செய்யாமல், மக்களின் நலனைக் கருதி முன்கூட்டியே முன்னாயத்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வலியுறுத்தியுள்ளார்.