சிறையிலடைப்பதால் நாடு முன்னேறாது; திட்டமிட்ட வேலைத்திட்டமே அவசியம் - திலித் ஜயவீர வலியுறுத்தல்!


பலரை சிறையில் அடைப்பதன் மூலம் ஒரு நாடு முன்னேற்றம் அடைய முடியாது. அதற்கு பதிலாக திட்டமிட்ட வேலைத்திட்டமே அவசியம் என சர்வஜன அதிகாரம் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜெயவீர தெரிவித்துள்ளார்.

கம்பஹா நிட்டம்புவ தொகுதியில் சர்வஜன அதிகாரம் கட்சியின் புதிய சபை நிறுவும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் உரையாற்றுகையில்,

தற்போதைய அரசாங்கம் நாட்டை கட்டியெழுப்பும் பிரதான வழியாக கைது நடவடிக்கைகள் மற்றும் சிறை தண்டனைகளை மட்டுமே கருதும் நிலை காணப்படுகிறது. அது நாட்டின் வளர்ச்சிக்கு தீர்வாக அமையாது.

குற்றச்சாட்டுகள் உள்ளவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை என்றாலும், அதனை அரசியல் மேடைகளில் கூச்சலிட்டு முன்னிறுத்துவதன் மூலம் நாட்டின் அடிப்படை பிரச்சினைகள் தீராது.

ஒவ்வொரு நடவடிக்கையிலும் முக்கியமாக கேட்க வேண்டிய கேள்வி என்னவென்றால், அந்த நடவடிக்கையால் நாட்டுக்கு கிடைக்கும் பயன் என்ன, குறிப்பாக இளைஞர் தலைமுறைக்கு கிடைக்கும் நன்மை என்ன என்பதே ஆகும். அத்துடன் நான் எந்தவொரு தனிப்பட்ட அரசியல் நபரையும் பாதுகாக்கும் நோக்கில் இந்தக் கருத்துகளை முன்வைக்கவில்ல. நாட்டின் எதிர்கால வளர்ச்சியை மையமாகக் கொண்டே எனது நிலைப்பாடு உள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தொடர்பான விடயங்கள் அல்லது அவருடன் இருந்த அரசியல் தரப்பினர் மீது மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் குறித்து நான் பேசுவது அவர்களை பாதுகாக்கும் நோக்கில் அல்ல. நாட்டை திசைதிருப்பும் அரசியல் அணுகுமுறைகள் சரியானதல்ல என்பதே எனது உறுதியான நிலைப்பாடு.

நாட்டை முன்னேற்றுவதற்கு கைது நடவடிக்கைகள் மட்டும் போதாது என்றும், பொருளாதார, சமூக மற்றும் அரசியல் துறைகளில் தெளிவான திட்டமிட்ட வேலைத்திட்டமே நாட்டின் முன்னேற்றத்துக்கு அடிப்படை என்றார்.