அமெரிக்க நிறுவனங்களுக்கு டிஜிட்டல் சேவை வரி விதிக்கும் நாடுகளுக்கு 100% சுங்கவரி – டிரம்ப் எச்சரிக்கை!



அமெரிக்க நிறுவனங்களை இலக்காகக் கொண்டு Digital Services Tax (DST) விதிக்கும் எந்த நாட்டின்மீதும், அந்த நாட்டிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதி செய்யப்படும் அனைத்து பொருட்களுக்கும் 100% சுங்கவரி விதிக்கப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் எச்சரித்துள்ளார்.

தனது Truth Social தளத்தில் வெளியிட்ட பதிவில், அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக டிஜிட்டல் சேவை வரியை அறிமுகப்படுத்த பல ஐரோப்பிய நாடுகள் நடவடிக்கை எடுத்து வருவதாகவும், அத்தகைய வரியை அமல்படுத்தும் எந்த நாடும் உடனடியாக 100% சுங்கவரியை எதிர்கொள்ளும் என்றும் தெரிவித்துள்ளார்.

மேலும், இந்த சுங்கவரி தற்போதுள்ள அல்லது எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் எந்த வர்த்தக ஒப்பந்தங்களையும் மீறி உடனடியாக அமலுக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவின் முக்கிய தொழில்நுட்ப நிறுவனங்களை அநியாயமாக இலக்காகக் கொண்டுள்ளதாகக் கூறி, பல நாடுகள் அறிமுகப்படுத்தியுள்ள அல்லது முன்மொழிந்துள்ள Digital Services Tax (DST)-க்கு அமெரிக்கா தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதற்கிடையில், இலங்கையில் ஜூலை 1 முதல், வெளிநாட்டு நிறுவனங்கள் வழங்கும் டிஜிட்டல் சேவைகளுக்கு 18% பெறுமதி சேர் வரி (VAT) அமல்படுத்தப்படவுள்ளது.

ஆனால், டிரம்ப் குறிப்பிட்டுள்ள Digital Services Tax (DST)-இற்கும் இலங்கை அறிமுகப்படுத்தும் VAT-க்கும் வித்தியாசம் உள்ளது. இலங்கையின் 18% VAT என்பது, நாட்டில் பயன்படுத்தப்படும் வெளிநாட்டு டிஜிட்டல் சேவைகளுக்கான பொதுவான பெறுமதி சேர் வரியாகும்; இது அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களை மட்டும் இலக்காகக் கொண்ட தனிப்பட்ட வரி அல்ல.