பல்லேகம ஹேமரத்தன தேரருக்கு DNA பரிசோதனைக்கு இரத்த மாதிரி வழங்க நீதிமன்றம் உத்தரவு


15 வயதான சிறுமி ஒருவர் துஷ்பிரயோகத்துக்கு ஆளாக்கப்பட்டதாக தெரிவிக்கப்படும் வழக்கில், சந்தேகநபரான முன்னாள் அட்டமஸ்தானங்களின் விகாராதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரர், ஜூன் 16 ஆம் திகதி அன்று அரச இரசாயனப்பகுப்பாய்வு திணைக்களத்துக்குச் சென்று மரபணு பரிசோதனைக்காக (டி.என்.ஏ) தனது இரத்த மாதிரியை வழங்குமாறு அனுராதபுரம் நீதிவான் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை (12) உத்தரவிட்டது.

மேலும் சந்தேகநபரான தேரரிடமிருந்து மரபணு பரிசோதனைக்காக இரத்த மாதிரியை பெற்றுக்கொண்டதன் பின்னர், மேற்கொள்ளப்படும் மரபணு பரிசோதனை (டி.என்.ஏ) அறிக்கையை அரச இரசாயனன்பகுப்பாய்வு அதிகாரிகளால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் எனவும் இதன்போது நீதிவான் அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுத்தார்.

மேற்படி வழக்கு வெள்ளிக்கிழமை (12) அனுராதபுரம் நீதிவான் நீதிமன்ற நீதிவான் சியபத் சசிந்து விக்ரமரத்ன முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது, சம்பவம் தொடர்பில் நிட்டம்புவ பொலிஸாரால் நேற்றைய தினம் மேலதிக அறிக்கை மன்றில் தாக்கல் செய்யப்பட்டிருந்த நிலையில், அதனை பரிசீலித்த நீதிவான் மேற்படி உத்தரவை பிறப்பித்திருந்தார்.

வழக்குத் தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கை ஒன்றை மன்றில் சமர்ப்பித்த பொலிஸார் தெரிவிக்கையில், பாதிக்கப்பட்ட தரப்பை சேர்ந்த சிறுமியால் புதைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் பொலிஸாரால் மீட்கப்பட்ட இரத்தம் படிந்தது என சந்தேகிக்கப்படும் ஆடை, மரபணு பரிசோதனைக்காக ஏற்கனவே அரச இரசாயனப்பகுப்பாய்வு திணைக்களத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டது. அதற்கமைய வழக்குப் பொருளாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள இந்த இரத்தம் படிந்த ஆடை தொடர்பான மரபணு பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், குறித்த அறிக்கையும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளது.

அதற்கமைய அந்த ஆடையில் சிறுமியின் மரபணு மாதிரி இருந்தமை பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அத்தோடு அவ்வாடையில் உள்ள மரபணு மாதிரிகளுடன் ஒப்பிடுவதற்காக, சந்தேகநபரான முன்னாள் அட்டமஸ்தானங்களின் விகாராதிபதி பல்லேகம ஹேமரத்ன தேரரின் இரத்த மாதிரியையும் பெறுவதும் அவசியமாக உள்ளதுடன், சந்தேகநபர் மரபணு பரிசோதனைக்கு அவசியமான இரத்த மாதிரியை அரச இரசாயனப்பகுப்பாய்வு திணைக்களத்துக்கு வழங்க வேண்டும் என உத்தரவிடுமாறு பொலிஸார் மன்றில் கோரிக்கை ஒன்றை முன்வைத்திருந்தனர்.

மேலும் சிறுமியின் இரத்தம் படிந்த ஆடையில் உள்ள மரபணு மாதிரிகளுடன், சந்தேகநபரின் மரபணு மாதிரியும் பொருந்துகிறதா? என்பதை உறுதிப்படுத்துவதற்காக அப்பரிசோதனை அறிக்கையை அரச இரசாயனப்பகுப்பாய்வு அதிகாரிகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடுமாறு பொலிஸ் மேலும் ஒரு கோரிக்கையையும் முன்வைத்திருந்தனர்.

அதற்கமைய நேற்றைய தினம் மன்றில் முன்வைக்கப்பட்ட சமர்ப்பணங்களை பரிசீலனை செய்த நீதிவான், சந்தேகநபரான முன்னாள் அட்டமஸ்தானங்களின் விகாராதிபதி பல்லேகம ஹேமரத்தன தேரர் வரும் 16 ஆம் திகதியன்று மரபணு மாதிரி பரிசோதனைக்கு அவசியமான இரத்த மாதிரியை அரச இரசாயனப்பகுப்பாய்வு தினைக்களத்துக்குச் சென்று வழங்க வேண்டும் என உத்தரவிட்டிருந்ததுடன், அரச இரசாயனப்பகுப்பாய்வு பிரிவினர் இது தொடர்பில் மரபணு பரிசோதனைகளை மேற்கொண்டு அந்த அறிக்கையை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறும் பணிப்புரை விடுத்திருந்தார்.