
வருடாந்த கட்டணத் திருத்தத்துக்கமைய புதிய பேருந்து கட்டண திருத்தத்தை தேசிய போக்குவரத்து ஆணைக்குழு உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.இதற்கமைய ஆரம்பக்கட்டணம் 34 ரூபாவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதுடன் புதிய கட்டணத் திருத்தம் எதிர்வரும் திங்கட்கிழமை (6) முதல் அமுலுக்கு வரும்
அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்களை விட அதிக கட்டணம் வசூலிக்கும் எந்தவொரு நடத்துனருக்கும் எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
தேசிய போக்குவரத்து கட்டணக் கொள்கையொன்று உருவாக்கப்படும் வரையிலான ஓர் இடைக்கால நடவடிக்கையாக, 2026 ஜூன் 30 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த கட்டணத் திருத்தத்திற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.
12 முக்கிய செலவுக் காரணிகளில் ஏற்படும் மாற்றங்களைக் கருத்தில் கொள்ளும் செலவுக் சுட்டெண்ணின் அடிப்படையில் வருடாந்த பேருந்து கட்டணத் திருத்தம் ஒவ்வொரு ஆண்டும் ஜுலை மாதம் 01 ஆம் திகதி நடைமுறைப்படுத்தப்படும்.
திருத்தப்பட்ட புதிய கட்டணத் திருத்தத்துக்கமைய, 100 கிலோமீட்டருக்கும் குறைவான தூரப் பாதைகளில் இயக்கப்படும் சாதாரண பேருந்து சேவைகளுக்கான கட்டணம் 12 சதவீதம் அதிகரிக்கப்படும்.
100 கிலோமீட்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட தூரப் பாதைகளில் இயக்கப்படும் சாதாரண பேருந்து சேவைகளுக்கான கட்டண அமைப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டு, 20 சதவீதம் கட்டண அதிகரிப்புக்கு உள்ளாக்கப்படும்.
100 கிலோமீட்டருக்கும் குறைவான தூரப் பாதைகளில் இயக்கப்படும் சொகுசு பேருந்து சேவைகளுக்கான கட்டணமும் 12 சதவீதம் அதிகரிக்கப்படும்.100 கிலோமீட்டர் மற்றும் அதற்கு மேற்பட்ட தூரப் பாதைகளில் இயக்கப்படும் சொகுசு பேருந்து சேவைகளுக்கான கட்டண அமைப்பில் திருத்தங்கள் செய்யப்பட்டு, 15 சதவீதம் கட்டண அதிகரிப்புக்கு உள்ளாக்கப்படும்.
அரை சொகுசு பேருந்து கட்டணங்கள் தொடர்பான வழக்கு தற்போது மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ளதால், அரை சொகுசு சேவைகளுக்கான கட்டணங்கள் திருத்தப்பட்ட சாதாரண பேருந்து கட்டணத்தைப் போல் 1.5 மடங்கு என்ற அடிப்படையில் தொடர்ந்து கணக்கிடப்படும்.
அதிவேக நெடுஞ்சாலைகளில் இயக்கப்படும் அதி-சொகுசு பேருந்து சேவைகள் மற்றும் சாதாரண நெடுஞ்சாலை பேருந்து சேவைகள் ஆகியவை திருத்தப்பட்ட சொகுசு பேருந்து கட்டண அமைப்பிற்கு இணங்க கட்டணங்களை அறவிட முடியும் என்றும் ஆணைக்குழு மேலும் அறிவித்துள்ளது.
மாகாணங்களுக்கு இடையேயான மற்றும் மாகாணங்களுக்கு உள்ளான பயணிகள் போக்குவரத்து சேவைகளை வழங்கும் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் அனைத்து தனியார் பேருந்து உரிமையாளர்களும் அங்கீகரிக்கப்பட்ட கட்டணங்களை மட்டுமே அறிவிடுமாறு தேசிய போக்குவரத்து ஆணைக்குழு அறிவுறுத்தியுள்ளது.
அங்கீகரிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிகமாக கட்டணம் அறவிடும் உரிமையாளர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அதுகுறித்த புகார்களை தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் 1955 என்ற உடனடித் தொலைபேசி இலக்கம் மூலமாகவோ அல்லது 071 259 5555 என்ற வாட்ஸ்அப் இலக்கம் மூலமாகவோ முன்வைக்க முடியும் என்று தேசிய போக்குவரத்து ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இலங்கை செய்திகள்







.jpg)
.jpg)




.png)