கைதிகளுக்கும் சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில், இரு பாதுகாப்பு அதிகாரிகள் உட்பட மேலும் மூவர் உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை பணிப்பாளர் உறுதிப்படுத்தியுள்ளார்.
நேற்று மாலை இருதரப்பு கைதிகளிடையே ஏற்பட்ட மோதலில் இரு கைதிகள் உயிரிழந்திருந்த நிலையில், இன்று காலை நிலைமை மேலும் மோசமடைந்து சிறை அதிகாரிகள் மீதான தாக்குதலாக மாறியுள்ளது.
பொலிஸாரின் தகவல்படி, இன்று காலை சிறைச்சாலை அதிகாரிகளுக்கும் கைதிகள் குழுவொன்றிற்கும் இடையே இந்த கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது. இதன்போது கைதிகள் நடத்திய தாக்குதலில் பல சிறைச்சாலை அதிகாரிகள் காயமடைந்துள்ளனர்.
இன்றைய தினம் உயிரிழந்த மூவரில் இருவர் சிறைச்சாலை பாதுகாப்பு அதிகாரிகள் எனவும் ஒருவர் கைதி எனவும் தெரியவந்துள்ளது.
சுமார் 35 பேர் காயமடைந்து நீர்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பாலானோர் பாதுகாப்புப் படை அதிகாரிகள் என்பது குறிப்பிடத்தக்கது.
நிலைமையை கட்டுப்படுத்த விசேட அதிரடிப் படை வான் நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.
மேலும், நிலைமையைத் தளர்த்துவதற்காக நீர்கொழும்பு பொலிஸாருக்கு மேலதிகமாக மீரிகம, வேயங்கொட உள்ளிட்ட சுற்றியுள்ள ஏனைய பொலிஸ் நிலையங்களின் அதிகாரிகளும் அவசரமாக வரவழைக்கப்பட்டுள்ளனர்.
அத்துடன், சிறைச்சாலையின் பாதுகாப்பை முழுமையாக உறுதிப்படுத்துவதற்காக பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் அங்கு குவிக்கப்பட்டுள்ளனர்.
நேற்று மாலை கைதிகளிடையே ஏற்பட்ட முதற்கட்ட மோதலில் 2 கைதிகள் உயிரிழந்ததுடன், 34 பேர் காயமடைந்திருந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று காலை ஏற்பட்ட வன்முறையில் மேலும் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதன் மூலம் கடந்த 24 மணித்தியாலங்களுக்குள் நீர்கொழும்பு சிறைச்சாலை மோதல்களில் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 5 ஆக உயர்வடைந்துள்ளது.







.jpg)






.jpg)