
கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் இன்றைய தினம் (30) ஆஜரான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ, நீதிமன்ற வளாகத்திற்கு வெளியே ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கையில் அரசாங்கத்தைக் கடுமையாகச் சாடினார்.
நாடாளுமன்றத்தில் காணப்படும் 159 ஆசனப் பெரும்பான்மை மற்றும் ஜனாதிபதியின் அளப்பரிய அதிகாரங்கள் காரணமாக தற்போதைய அரசாங்கம் முற்றிலும் அதிகார போதையில் மூழ்கியுள்ளதாக அவர் குற்றம் சாட்டினார்.
தரைமட்டத்தின் உண்மையான ஆழம் புரியாமல் உயரத்தில் பறக்கும் இந்த அரசாங்கம், பாய்ந்து பார்க்கும்போதுதான் எவ்வளவு பெரிய பள்ளத்தில் வீழ்ந்திருக்கிறோம் என்பதைப் புரிந்துகொள்ளும் என எச்சரித்த அவர், அவ்வாறு விழுந்து அடிபட்டு விநாசமடைவதற்கே அரசு முற்படுவதாகவும் குறிப்பிட்டிருந்தார்.
நாட்டின் நீதித்துறை மீது தமக்கு இன்னமும் நம்பிக்கை உள்ளபோதிலும், தற்போதைய பொலிஸ் கட்டமைப்பு முற்றிலும் அரசியல்மயமாக்கப்பட்டு 'ஜே.வி.பி பொலிஸாக' அல்லது 'பலவத்தை பொலிஸாக' செயல்படுவதால் பொலிஸார் மீது எமக்கு எவ்வித நம்பிக்கையும் இல்லை என நாமல் தெரிவித்தார்.
மேலும், உயர் நீதிமன்ற நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை அதிகரிக்கும் அரசின் திட்டம் குறித்துச் சுட்டிக்காட்டிய அவர், ஒரு குறிப்பிட்ட நபரை இலக்குவைத்து அரசியலமைப்புத் திருத்தங்களை மேற்கொள்வது வரலாற்றுப் பிழையாகும் என்றும், இத்தகைய நபர்களை மையமாகக் கொண்ட திருத்தங்களால் நாட்டுக்கு எந்தப் பயனும் ஏற்பட்டதில்லை என்றும் சாடினார்.
நாட்டில் மக்கள் கடும் பொருளாதார நெருக்கடி, அசாத்தியமான வரிச்சுமை மற்றும் அத்தியாவசியப் பொருட்களின் விலை உயர்வால் திண்டாடி வரும் நிலையில், விவசாயிகள் மற்றும் மீனவர்கள் கடுமையான வாழ்வாதாரப் பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளனர்.
இவ்வாறான மக்களின் அன்றாடப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதை விடுத்து, அரசாங்கம் தங்களின் உத்தேச அரசியலமைப்புத் திருத்தங்கள் மற்றும் அதிகார மமதையில் மட்டுமே கவனம் செலுத்தி வருவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இதனிடையே, சட்டவிரோதமாக சம்பாதிக்கப்பட்ட 15 மில்லியன் ரூபாயை 'என்.ஆர் கன்சல்டன்சி' (NR Consultancy) நிறுவனத்தில் முதலீடு செய்து பணச்சலவையில் ஈடுபட்டதாக நாமல் உள்ளிட்ட நால்வருக்கு எதிராகத் தொடரப்பட்ட வழக்கு, கொழும்பு தலைமை நீதவான் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
2015ஆம் ஆண்டு 'ஊழலுக்கு எதிரான குரல்' அமைப்பின் அழைப்பாளர் வசந்த சமரசிங்க அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் முன்னெடுக்கப்படும் இவ்வழக்கில், இரு தனியார் வங்கிக் கணக்குகளைப் பரிசீலித்து விபரங்களைப் பெற வேண்டியுள்ளதால் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) கால அவகாசம் கோரியது.
அதனையேற்று வழக்கு விசாரணையை எதிர்வரும் ஒக்டோபர் 29ஆம் திகதிக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
இவ்வழக்கில் பிணையில் உள்ள நாமல், நித்யா சேனாதி சமரநாயக்க, சுஜானி போகொல்லாகம மற்றும் சுதர்ஷன பண்டார கணேகொடை ஆகிய நால்வரும் இன்றைய தினம் திறந்த நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.
அத்துடன், 'கவர்ஸ் கோர்பரேட் சர்வீசஸ்' (Gowers Corporate Services) நிறுவனத்தின் மூலம் முறையற்ற வழியில் ஈட்டப்பட்ட 125 மில்லியன் ரூபாயைப் பயன்படுத்தி பங்குகளைக் கொள்முதல் செய்ததாக சட்ட மாஅதிபரினால் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட மற்றொரு நிதிச் சலவை தடுப்பு வழக்கும் நிலுவையில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.




.jpg)





.jpg)


