முகநூலில் அறிமுகமான போலி லண்டன் வைத்தியர் : மட்டக்களப்புப் பெண்ணிடம் ரூ.8.37 இலட்சம் மோசடி!



மட்டக்களப்பில் முகநூல் மூலம் அறிமுகமான போலி வெளிநாட்டு வைத்தியர் அனுப்பியதாகக் கூறப்பட்ட பொதியைப் பெற்றுத் தருவதாக ஏமாற்றி, பெண்ணொருவரிடம் ரூ.8.37 இலட்சம் மோசடி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மட்டக்களப்பில், முகநூல் ஊடாக மூன்று நாட்களில் அறிமுகமான போலி வெளிநாட்டு வைத்தியரின் வலையில் சிக்கிய பெண்ணொருவர், ரூ.8 இலட்சத்து 37 ஆயிரம் பணத்தை இணைய மோசடி கும்பலிடம் இழந்துள்ளதாக மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் தகவலின்படி, சம்பந்தப்பட்ட பெண்ணுடன் கடந்த 13ஆம் திகதி லண்டனில் வசிக்கும் "டான்" என்ற பெயரில் தன்னை வைத்தியராக அறிமுகப்படுத்திய நபர் முகநூல் மூலம் நட்பை ஏற்படுத்தியுள்ளார்.

பின்னர், கடந்த 16ஆம் திகதி குறித்த பெண்ணின் கையடக்கத் தொலைபேசிக்கு தொடர்புகொண்ட நபர், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இயங்கும் பொதிகளை விநியோகம் செய்யும் நிறுவனத்தைச் சேர்ந்தவர் எனத் தன்னை அறிமுகப்படுத்தி, லண்டனில் இருந்து வைத்தியர் டான் அனுப்பிய விலையுயர்ந்த பொருட்கள் அடங்கிய பொதி வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.

அந்தப் பொதியை சுங்கத் திணைக்களத்திலிருந்து விடுவிக்க முதலில் ரூ.87,000 செலுத்துமாறு கூறியதை நம்பிய பெண், கடந்த 17ஆம் திகதி அந்தத் தொகையை வங்கிக் கணக்கொன்றில் செலுத்தியுள்ளார்.

அதனைத் தொடர்ந்து மேலும் ரூ.3 இலட்சம் தேவைப்படுவதாகக் கூறியதால் அதையும் செலுத்தியுள்ளார். பின்னர், பொதியை விடுவிக்க மேலும் பணம் தேவைப்படுவதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து, பெண்ணின் தாயார் ரூ.3 இலட்சத்து 50 ஆயிரத்தையும் அதே கணக்கில் வைப்புச் செய்துள்ளார்.

இதற்குப் பிறகும் மோசடி கும்பல் மேலும் ரூ.1 இலட்சமும், பின்னர் ரூ.1 இலட்சத்து 50 ஆயிரமும் கோரிய நிலையில், சந்தேகமடைந்த பெண் மேலதிக பணம் வழங்க மறுத்துள்ளார்.

அதன்பின்னர் மோசடி கும்பலைத் தொடர்புகொள்ள முயன்றபோது, அவர்களது தொலைபேசி செயலிழக்கப்பட்டிருந்ததாகவும், இதையடுத்து தான் மோசடிக்குள்ளானதை உணர்ந்து பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ள மட்டக்களப்பு தலைமையக பொலிஸார், முகநூல் உள்ளிட்ட சமூக ஊடகங்கள் வழியாக அறிமுகமாகும் தெரியாத நபர்களை நம்பி பணம் அனுப்ப வேண்டாம் என்றும், வெளிநாடுகளில் இருந்து பார்சல் வந்துள்ளது எனக் கூறி பணம் கோரும் நபர்கள் தொடர்பில் மிகவும் அவதானமாக இருக்குமாறும் பொதுமக்களிடம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.