கதிர்காமம் பாதயாத்திரை பக்தர்களுக்கான அன்னதான பொருட்கள், கழிவு அகற்றும் உழவு இயந்திரப் பெட்டியில் எடுத்துச் செல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட குற்றச்சாட்டை மட்டக்களப்பு மாநகர சபை கடுமையாக மறுத்துள்ளது.
மட்டக்களப்பு மாநகர சபையின் முதல்வர் சிவம் பாக்கியநாதன், இன்று (19) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில், இந்தக் கருத்து மாநகர சபையின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவித்ததாவது , 2020ஆம் ஆண்டு முதல் மாநகர சபையும் கொடையாளர்களும் இணைந்து கதிர்காமம் பாதயாத்திரை பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கி வருகின்றனர். இந்த ஆண்டும் அதற்காக சமையல் பாத்திரங்கள் மற்றும் தேவையான பொருட்கள், மாநகர சபையின் புதிய மற்றும் சேவைப் பயன்பாட்டில் உள்ள உழவு இயந்திரங்கள் மூலம் எடுத்துச் செல்லப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
எனினும், மாநகர சபை சுகாதாரப் பிரிவில் கழிவுகளை அகற்ற பயன்படுத்தப்படும் பெட்டியில் உணவுப் பொருட்கள் எடுத்துச் செல்லப்பட்டதாக சமூக ஊடகங்களில் வெளியிடப்பட்ட தகவல் முற்றிலும் தவறானது என்றும், அது மாநகர சபை, அதன் ஊழியர்கள் மற்றும் யாத்திரிகர்களுக்கு மனஉளைச்சலை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார்.
இதனையடுத்து சம்பந்தப்பட்ட நபருக்கு எதிராக மட்டக்களப்பு தலைமையக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், அவதூறு வழக்கு தொடர்வதற்கான சட்ட நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் முதல்வர் சிவம் பாக்கியநாதன் தெரிவித்தார்.














.jpg)