இக்கலந்துரையாடலில் பாராளுமன்ற உறுப்பினர்கள், காணி ஆணையாளர் நாயகம், மாகாண காணி ஆணையாளர், மாவட்டச் செயலாளர், மாவட்டத்தின் அனைத்து பிரதேச செயலாளர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கலந்துகொண்டு, காணி நிர்வாகம், காணி உரிமைகள் மற்றும் பொதுமக்கள் எதிர்நோக்கும் பல்வேறு காணிப் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தனர்.
இதன்போது, மக்களின் நீண்டகால காணி உரிமைப் பிரச்சினைகள், காணி ஆவணப்படுத்தல், காணி அனுமதிகள் மற்றும் அரச காணி நிர்வாகம் உள்ளிட்ட விடயங்களில் நிலுவையில் உள்ள பிரச்சினைகளுக்கு விரைவான, நடைமுறைசார் தீர்வுகளை வழங்க வேண்டியதன் அவசியம் வலியுறுத்தப்பட்டது.
மேலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் காணப்படும் காணிப் பிரச்சினைகள் ஒரே தன்மையுடையவை அல்ல என்றும், சில பிரச்சினைகள் இனங்களுக்கிடையிலான நுணுக்கமான விடயங்களுடன் தொடர்புடையதால் அவற்றுக்கு அனைத்து தரப்பினரின் கருத்துக்களையும் உள்ளடக்கிய விரிவான அறிக்கை தயாரிக்கப்பட வேண்டும் என காணி ஆணையாளர் நாயகம் அறிவுறுத்தினார்.
அத்துடன், ஏறாவூர்ப்பற்று பிரதேசத்தின் புளுட்டுமான் ஓடை பகுதியில் தனியார் காணிகள் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பாக முழுமையான அறிக்கையை சமர்ப்பிக்கவும், திராய்மடு பகுதியில் இடம்பெற்றுள்ளதாகக் கூறப்படும் காணி ஆக்கிரமிப்பு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் குறித்து விரிவான அறிக்கையையும் சமர்ப்பிக்க அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கப்பட்டது.
அரச காணிகளின் பயன்பாடு, நீண்டகால குத்தகை காணிகளின் நிலை மற்றும் மேய்ச்சல் தரை நிலங்களின் முகாமைத்துவம் குறித்தும் விரிவாக ஆராயப்பட்டதுடன், தொடர்புடைய அனைத்து விடயங்களுக்கும் விரைவில் விரிவான அறிக்கைகளை சமர்ப்பிக்குமாறு காணி ஆணையாளர் நாயகம் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.



.jpg)








.jpg)

