மலேசிய கடவுச்சீட்டுகளுடன் கசகஸ்தான் செல்ல முயன்ற இலங்கைக் குடும்பம் தாய்லாந்தில் கைது



தாய்லாந்தின் பாங்காக்கில் உள்ள டான் முயாங் (Don Mueang) சர்வதேச விமான நிலையத்தில், மலேசிய கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி கசகஸ்தான் செல்ல முயன்ற இலங்கைக் குடும்பம் ஒன்று குடிவரவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

Khaosod வெளியிட்ட தகவலின்படி, குறித்த இலங்கைக் குடும்பம் முதலில் தங்களது சொந்த இலங்கைக் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி தாய்லாந்திற்குள் நுழைந்த பின்னர், தரைமார்க்கமாக மலேசியாவுக்கு பயணித்துள்ளனர்.

பின்னர், மலேசியக் கடவுச்சீட்டுகளைப் பயன்படுத்தி மீண்டும் தாய்லாந்திற்குள் நுழைந்து கசகஸ்தான் செல்ல முயன்றுள்ளனர். அவர்களுடன் பயணித்த மலேசியப் பெண் ஒருவர், இரு குழந்தைகளின் உயிர்த்தாயாக பொய்யாகக் கூறியிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், விமான நிறுவன அதிகாரிகள் பயண ஆவணங்களில் முரண்பாடுகளை கண்டறிந்ததால் அவர்களுக்கு விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது. இதையடுத்து, மியான்மர் வழியாக பயணிக்க முயன்ற நிலையில், சம்பவம் குடிவரவு அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது.

பின்னர் மியான்மரிலிருந்து டான் முயாங் விமான நிலையம் ஊடாக கசகஸ்தான் செல்ல மீண்டும் முயன்றபோது, தாய்லாந்து குடிவரவு அதிகாரிகள் தலையிட்டு அவர்களை கைது செய்தனர்.

மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில், இலங்கைப் பெண்ணும் மூத்த குழந்தையும் வேறு நபர்களுக்குச் சொந்தமான மலேசியக் கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமாக பயன்படுத்தியமை தெரியவந்துள்ளது. இளைய குழந்தை சட்டபூர்வமாக வழங்கப்பட்ட மலேசியக் கடவுச்சீட்டுடன் பயணித்திருக்கலாம் என அதிகாரிகள் சந்தேகிக்கின்றனர்.

இந்த சர்வதேச கடத்தல் வலையமைப்பு தொடர்பாக ஐக்கிய இராச்சியம், கனடா மற்றும் இலங்கை சட்ட அமலாக்க அமைப்புகள் முன்னரே பிராந்திய அதிகாரிகளுக்கு எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாட்டு குழந்தைகளை மலேசியாவுக்கு கடத்தி, போலியான பிறப்புச் சான்றிதழ்கள் பெற்றுக்கொடுத்து, அதன் அடிப்படையில் அதிகாரப்பூர்வ மலேசியக் கடவுச்சீட்டுகளைப் பெறும் முறையை இந்தக் குழு பயன்படுத்தி வந்ததாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

பயண ஆவணங்களை தவறாக பயன்படுத்தியமை மற்றும் குற்றச் சதியில் ஈடுபட்டமை ஆகிய குற்றச்சாட்டுகளின் கீழ் இரு வயது வந்த பெண்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதேவேளை, நலன்புரி அதிகாரிகளின் மதிப்பீட்டின் பின்னர், இரண்டு சிறுவர்களும் மனிதக் கடத்தலின் பாதிப்புக்குள்ளானவர்கள் அல்ல என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்கள் பாதுகாப்பு பராமரிப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், இலங்கைத் தூதரகத்தின் ஒத்துழைப்புடன் தாயகத்திற்கு பாதுகாப்பாக அனுப்புவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.