
மட்டக்களப்பில் மோட்டார் சைக்கிளில் பயணித்தபோது தவறவிடப்பட்ட சுமார் 3 பவுன் தங்க நகை, பணம் மற்றும் முக்கிய ஆவணங்கள் அடங்கிய பணப்பையை, மீனவர் ஒருவர் மீட்டு உரியவரிடம் ஒப்படைத்த சம்பவம் இன்று (09) இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு இருதயபுரம் பகுதியைச் சேர்ந்த குடும்பப் பெண் ஒருவர், தனது பிள்ளையை மட்டக்களப்பு நகரிலுள்ள பாடசாலை ஒன்றில் விடுவதற்காக இன்று காலை மோட்டார் சைக்கிளில் சென்றுள்ளார். பயணத்தின் போது, மோட்டார் சைக்கிளின் முன்பகுதியில் வைக்கப்பட்டிருந்த அவரது கைப்பை எதிர்பாராதவிதமாக வீதியில் தவறி விழுந்துள்ளது.
குறித்த பணப்பையில் சுமார் 3 பவுன் எடையுள்ள தங்க நகைகள், ஒரு தொகை பணம், வங்கி அட்டைகள், சாரதி அனுமதிப்பத்திரம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்கள் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
பிள்ளையை பாடசாலையில் விட்டுவிட்டு வீடு திரும்பிய பின்னரே பணப்பை காணாமல் போனதை உணர்ந்த அவர், தாம் பயணித்த வீதியில் பல மணி நேரம் தேடியுள்ளார்.
இந்நிலையில், மட்டக்களப்பு வெள்ளைப் பாலம் அருகே வாவியில் மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவர் ஒருவர், மோட்டார் சைக்கிளிலிருந்து பணப்பை கீழே விழுந்ததை அவதானித்துள்ளார்.
இதுகுறித்து மீனவர் தெரிவிக்கையில், மோட்டார் சைக்கிளை நிறுத்துவதற்காக பலமுறை சத்தமிட்டும், வாகனம் தொடர்ந்து சென்றதால் பணப்பையை பாதுகாப்பாக எடுத்துவைத்ததாகவும், உரிமையாளர் தேடி வருவார் என்ற நம்பிக்கையில் அதனைத் திறந்து பார்க்காமல் காத்திருந்ததாகவும் கூறினார்.
பின்னர், பணப்பையைத் தேடி வந்த பெண்ணிடம் உரிய அடையாளங்களை உறுதிப்படுத்தியதன் பின்னர், அதனை முழுமையாக ஒப்படைத்துள்ளார்.
பணப்பையில் இருந்த தங்க நகைகள், பணம் மற்றும் ஆவணங்கள் எவ்வித சேதமுமின்றி மீட்கப்பட்டதாகவும், அவற்றை ஒப்படைத்த மீனவருக்கு சம்பந்தப்பட்ட குடும்பத்தினர் நன்றியைத் தெரிவித்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.






.jpg)


.jpg)



