இதற்கு எழுந்து பதிலளித்த கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் குறிப்பிடும் விடயங்களுடன் உடன்படுகிறேன். இதுவரை விநியோகிக்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்கள் சிறப்பு குழு ஊடாக பரிசீலிக்கப்படுகிறது. குழுவின் அறிக்கைக்கு அமைய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (7) நடைபெற்ற அமர்வின்போது மேலதிக கேள்விகளை முன்வைத்து உரையாற்றிய சாணக்கியன் இராசமாணிக்கம்,
கனிம வளங்கள் மற்றும் இரத்தினக்கல் அகழ்வு மற்றும் அதனால் ஏற்படும் சூழலியல் பாதிப்பு தொடர்பில் கொழும்பில் அண்மையில் நடைபெற்ற விசேட மாநாட்டில் அமைச்சர் கலந்துகொண்டார்.
அமைச்சர் வழங்கிய பதிலில் 'குறித்த கருத்திட்டங்களில் சுற்றுச்சூழல் தொடர்பில் எவ்வித மதிப்பாய்வும் மேற்கொள்ளப்படவில்லை' என்று குறிப்பிட்டுள்ளார். இது பிரதானதொரு காரணியாகும். இந்த விடயம் தொடர்பான நிறுவனங்களின் பட்டியல் இருப்பதாகவும், அவற்றை சபைக்கு சமர்ப்பிப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
இந்த நிறுவனங்கள் பங்குச்சந்தையின் அனுமதிப் பத்திரங்களை விநியோகித்து பெருமளவில் இலாபமடைவதாக அமைச்சர் குறிப்பிட்டார். உண்மையை ஏற்றுக்கொண்டார். உயர்நீதிமன்ற வழக்கு எண் 137/2017 பிரகாரம் புவிச்சரிதவியல் அளவை சுரங்க பணியக நிறுவனத்துக்கு வழங்கிய தீர்ப்பில் அரசியலமைப்பின் 12 பிரகாரம் அனைவருக்கும் சமவுரிமை வழங்கப்பட வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புவிச் சரிதவியல் அளவை சுரங்க பணியக நிறுவனம் கடந்த காலப்பகுதியில் வடக்கு, கிழக்கு மற்றும் தெற்கு பகுதிகளில் மேற்கொண்ட கனிமவள ஆய்வுக்கு தற்போது அகழ்வு அனுமதி வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. இது அச்சுறுத்தலானது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் திருக்கோவில், வாகரை ஆகிய பகுதிகளில் இவ்வாறான நிலைமை காணப்படுகிறது. ஆகவே இதுவரை வழங்கப்பட்டுள்ள சகல அனுமதிப் பத்திரங்களையும் உயர்நீதிமன்ற தீர்ப்புக்கமைய இரத்துச் செய்ய முடியும்.
கனிம வளங்கள் மற்றும் நீர் வளத்தை ஒரே கட்டமாக அகழ்ந்தெடுத்தால் மீண்டும் அந்த வளங்கள் உருவாகாது. ஆகவே கனிம வள அகழ்வின்போது சுற்றுச்சூழல் தொடர்பான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டும்.
ஜனாதிபதி மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வந்த போது மட்டக்களப்பு மாவட்ட பொறியியலாளர் தொடர்பில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளது. இந்த நபர் நீரிழிவு நோயாளர்களுக்கு நிதியுதவி செய்வதாக குறிப்பிட்டுக்கொண்டு அனுமதிப்பத்திர நபர்களிடமிருந்து தலா 50 ஆயிரம் ரூபா நிதி சேகரித்துள்ளார்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் புவிச் சரிதவியல் அளவை சுரங்க பணியக நிறுவனத்தின் பொறியியலாளர் அனுமதிப்பத்திரம் விநியோகிப்பதில்லை. அங்குள்ள தரகர் ஊடாக சென்றால் தான் அனுமதிப்பத்திரம் கிடைக்கப்பெறும். வாழைச்சேனை, ஆரையம்பதி ஆகிய பிரதேச சபைகளுக்காக புவிச் சரிதவியல் அளவை சுரங்க பணியக நிறுவனத்துக்கு விடுத்த கோரிக்கை இதுவரையில் பரிசீலிக்கப்படவில்லை. ஆனால் தனியார் நிறுவனம் விடுத்த கோரிக்கைக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அம்பாந்தோட்டை மாவட்டத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவில் நிராகரிக்கப்பட்ட புவிச் சரிதவியல் அளவை சுரங்க பணியக நிறுவனத்தின் அதிகாரியை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வழங்க வேண்டாம். இதுவரை வழங்கப்பட்ட அனுமதிப் பத்திரங்களை இரத்துச் செய்யுங்கள், புதிய சிறந்த பொறியியலாளரை மட்டக்களப்பு மாவட்டத்துக்கு வழங்குங்கள் என்றார்.
இதற்கு எழுந்து பதிலளித்த கைத்தொழில் அமைச்சர் சுனில் ஹந்துனெத்தி, பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம் முன்வைத்த விடயங்கள் அனைத்துடன் உடன்படுகிறேன். இதுவரையில் விநியோகிக்கப்பட்டுள்ள அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் விசேட குழு ஊடாக பரிசீலிக்கப்படுகிறது.
குழுவின் அறிக்கைக்கு அமைய உரிய நடவடிக்கைகள் எடுக்கப்படும். சாணக்கியன் இராசமாணிக்கம் குறிப்பிட்ட விடயங்களுடன் உடன்படுகிறேன் என்றார்.






.jpg)



.jpg)



