நீர்கொழும்பு சிறைச்சாலை கூரையில் போராடிய 'வைத்தியபீட மாணவி' என்ற வைரல் கதை பொய் என அம்பலம் !




உருக்கமான பின்னணிக் கதை முற்றிலும் உண்மைக்கு புறம்பானது என 'உண்மைக் கண்டறியும் அமைப்பினால் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை 5 மற்றும் 6ஆம் திகதிகளில் நீர்கொழும்பு சிறைச்சாலையில் கைதிகளிடையே ஏற்பட்ட பயங்கர மோதலில் 29 பேர் உயிரிழந்ததுடன், நூற்றுக்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.

இந்த பதற்றமான சூழ்நிலையின் போது, சில கைதிகள் சிறைச்சாலையின் கூரையின் மேல் ஏறி கைதிகள் உரிமைக்காகப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதன்போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் இருந்த ஒரு பெண் கைதியின் தோற்றத்தை அடிப்படையாக வைத்து, சமூக வலைத்தளங்களில் "சந்துனி" என்ற பெயரில் ஒரு சோகமான கதை வேகமாகப் பரப்பப்பட்டது.

அதில், "குறித்த பெண் பதுளையின் பிரபல பாடசாலையில் படித்து, கொழும்பின் முன்னணி மகளிர் கல்லூரிக்குத் தெரிவாகி, வலைப்பந்தாட்ட போட்டிகளில் சிறந்து விளங்கிய ஒரு பிரகாசமான மாணவி என்றும், வாட்ஸ்அப் குழுவொன்றின் மூலம் பழகிய காதலன் கொடுத்தனுப்பிய பார்சலில் போதைப்பொருள் இருந்ததால் அவர் அறியாமலேயே கடத்தலில் சிக்கி 54(2) பிரிவின் கீழ் சிறையிலடைக்கப்பட்டார் என்றும், பின்னர் வெளியான உயர்தர பரீட்சை முடிவுகளில் அவர் வைத்தியப் பீடத்திற்குத் தெரிவாகியிருந்தமை தெரியவந்தது" என்றும் மிக உருக்கமாகக் குறிப்பிடப்பட்டிருந்தது.

உண்மை என்ன?

இந்தச் செய்தி சமூக வலைத்தளங்களில் பெரும் அதிர்வலைகளையும் அனுதாபத்தையும் ஏற்படுத்திய நிலையில், 'உண்மைக்கண்டறியும் அமைப்பொன்று இது குறித்து விரிவான விசாரணைகளை முன்னெடுத்தது.

இந்தக் கதையைத் தனது பேஸ்புக் பக்கத்தில் முதன்முதலில் பதிவிட்ட 'நலிந்த தனரஞ்சன்' நபர் "இது ஒரு உண்மைக் கதை அல்ல, பேஸ்புக் பக்கங்களில் பொழுதுபோக்கிற்காகவும், சமூகத்தின் கவனத்தை ஈர்ப்பதற்காகவும் நானே கற்பனையாக உருவாக்கிய கதை" என்ற ஒப்புக்கொண்டுள்ளார்.

மேலும், அவர் தன்னை ஒரு புலனாய்வு ஊடகவியலாளர் என்று சமூக வலைத்தளங்களில் அடையாளப்படுத்தியிருந்த போதிலும், அவர் ஒரு புகைப்படக் கலைஞர் மட்டுமே என்பதும் தெரியவந்துள்ளது.

அத்துடன், சிறைச்சாலைத் தரப்பினரிடம் இது குறித்து வினவிய போது, கைதிகளின் தனிப்பட்ட விபரங்களை வெளியிட முடியாது எனத் தெரிவித்துள்ளனர்.

எனவே, நீர்கொழும்பு சிறைக்கூரையின் மேல் போராடிய பெண் கைதி ஒரு வைத்திய மாணவி என்றும், காதலனால் ஏமாற்றப்பட்டு சிறை சென்றவர் என்றும் பரவும் செய்திகள் அனைத்தும் பேஸ்புக் பயனர் ஒருவரால் உருவாக்கப்பட்ட முற்றிலும் கற்பனையான வதந்தி என்பது உறுதியாகியுள்ளது.