
எல் நினோ (El Niño) காலநிலை தாக்கம் காரணமாக நிலவும் கடுமையான வறட்சியினால், மட்டக்களப்பு மாவட்டத்தின் பல பகுதிகளுக்கு குடிநீர் வழங்குவதற்கான பிரதான நீராதாரமான உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் நாளுக்கு நாள் வெகுவாக குறைந்து வருகிறது.
தற்போதைய அதிகரித்துள்ள வெப்பநிலை மற்றும் நீர்வளக் குறைபாட்டை கருத்தில் கொண்டு, தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் விநியோகிக்கப்படும் குடிநீரை பொதுமக்கள் மிகவும் சிக்கனமாகவும், அத்தியாவசிய தேவைகளுக்கு மட்டுமே பயன்படுத்துமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
மேலும், அனைவரும் குடிநீரை பொறுப்புணர்வுடன் பயன்படுத்தி, இந்த முயற்சிக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குமாறு தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையின் மட்டக்களப்பு பிராந்திய முகாமையாளர் பொறியியலாளர் எஸ். ஜயந்தன் அவர்கள் அனைத்து நீர்ப்பாவனையாளர்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேலும், தற்போதைய வறட்சி நிலைமை தொடர்ந்து தீவிரமடைந்து, உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் மேலும் குறைவடைந்தால், குடிநீர் வழங்கலைத் தொடர்ந்து பேணுவதற்காக எதிர்காலத்தில் திட்டமிட்ட நீர் வெட்டு நடைமுறைகள் அமுல்படுத்த வேண்டிய அவசியம் ஏற்படக்கூடும் என்றும் பிராந்திய முகாமையாளர் தெரிவித்துள்ளார்.




.jpg)








