
மட்டக்களப்பு ஆரையம்பதி வம்மிக்கேணி மாரியம்மன் ஆலய முன்றலில் கடந்த மாதம் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவம் தொடர்பாக தலைமறைவில் இருந்த இருவரை மூன்று வாள்களுடன் கைது செய்துள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 26 மற்றும் 19 வயதுடைய இரு இளைஞர்கள் என பொலிஸார் தெரிவித்தனர். இவர்கள் புதன்கிழமை (08) இரவு மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொலிஸார் தெரிவிப்பதாவது, கடந்த மாதம் 29ஆம் திகதி ஆரையம்பதி வம்மிக்கேணி மாரியம்மன் ஆலய முன்றலில் இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் மூவர் படுகாயமடைந்து மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். தாக்குதலை மேற்கொண்டவர்கள் சம்பவத்திற்குப் பின்னர் தலைமறைவாகியிருந்தனர்.
இச்சம்பவம் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து வந்த காத்தான்குடி பொலிஸ் நிலையத்தின் போதை ஒழிப்பு பிரிவு அதிகாரிகள், கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் சந்தேகநபர்கள் தங்கியிருந்ததாகக் கூறப்படும் வீட்டை சுற்றிவளைத்து இருவரையும் கைது செய்ததுடன், அவர்களிடமிருந்து மூன்று வாள்களையும் மீட்டுள்ளனர்.
ஆரம்பக்கட்ட விசாரணைகளின் அடிப்படையில், கைது செய்யப்பட்டவர்கள் ஒழுங்கமைக்கப்பட்ட வாள்வெட்டு குழுவுடன் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படுவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும், குறித்த குழுவினர் மோட்டார் சைக்கிள்களில் வாள்களுடன் சுற்றித்திரிந்து பொதுமக்களை அச்சுறுத்தியதுடன், போதைப்பொருள் கடத்தல் மற்றும் பல்வேறு வாள்வெட்டு தாக்குதல் சம்பவங்களுடனும் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற கோணத்திலும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அத்துடன், 2025 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் ஆரையம்பதி மகாவித்தியாலய மைதானத்தில் விளையாடிக் கொண்டிருந்த இளைஞர்கள் மீது நடத்தப்பட்டதாகக் கூறப்படும் வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்துடனும் இக்குழுவினருக்கு தொடர்பு இருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.
15 முதல் 28 வயதுக்குட்பட்ட 10-க்கும் மேற்பட்டோர் அடங்கிய குழுவொன்று இவ்வாறான குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்திருக்கலாம் என்பதும் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக காத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.






.jpg)



.jpg)


