அரச ஊழியர்களுக்கு 25,000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு வலியுறுத்தி 'செத்சிரிபாய' வளாகத்துக்கு முன்னால் துண்டுபிரசுர விநியோகம்


எதிர்வரும் 2027 ஆம் ஆண்டுக்கான வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக அரச ஊழியர்களுக்கு 25,000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறு வலியுறுத்தி, 'செத்சிரிபாய' வளாகத்துக்கு முன்னால் இன்று (14) செவ்வாய்க்கிழமை துண்டுபிரசுர விநியோகம் மற்றும் மக்கள் விழிப்புணர்வுப் பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

அரச சேவை தொழிற்சங்க கூட்டமைப்பு மற்றும் ஒருங்கிணைந்த அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் மத்திய நிலையம் ஆகிய நிறுவனத்தின் உறுப்பினர்கள் சிலரால் இந்த பிரச்சார நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது அரச சேவை தொழிற்சங்க மத்திய நிலையத்தின் இணைப்பாளர் அநுராத செனவிரத்ன ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,

அரச சேவை தொழிற்சங்க மத்திய நிலையம் என்ற ரீதியில், நாடு தழுவிய ரீதியில் துண்டுபிரசுரங்களை விநியோகிக்கும் விழிப்புணர்வு வேலைத்திட்டத்தை இன்று நாம் ஆரம்பித்துள்ளோம். இந்த அரசாங்கமானது கடந்த 2025 ஆம் ஆண்டில் வழங்கிய சம்பள உயர்வானது மூன்று ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டே வழங்கப்பட்டது. இதன் மூலம் கீழ்நிலை ஊழியர்களுக்கு மிகச் சொற்ப அளவிலான சம்பள உயர்வே கிடைத்துள்ளது.

தற்போது நாட்டில் நிலவும் வாழ்க்கைச் செலவு, மின்சாரக் கட்டணம், எரிபொருள் விலைகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் தொடர்ச்சியாக உயர்வடைந்துள்ளன. இதனால் உழைக்கும் மக்கள் தங்களின் அடிப்படைத் தேவைகளைக் கூட பூர்த்தி செய்துகொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியுள்ளது. அரசாங்கமோ செல்வந்தர்கள் தங்களின் இலாபங்களை அதிகரித்துக் கொள்வதற்கான சூழலை ஏற்படுத்திவிட்டு, பொருளாதார நெருக்கடியின் ஒட்டுமொத்த சுமையையும் மக்கள் மீது சுமத்தியுள்ளது.

இதன் காரணமாகவே, மக்களின் வாழ்க்கைச் சுமையைக் குறைக்குமாறும், அத்தியாவசியப் பொருட்கள் மீதான வரிகளை நீக்குமாறும், எதிர்வரும் 2027 ஆம் ஆண்டு வரவுசெலவுத் திட்டத்தின் ஊடாக 25,000 ரூபா இடைக்கால கொடுப்பனவை வழங்குமாறும் நாம் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம். எமக்கான கொடுப்பனவை பெற்றுக்கொள்ளும் வரையில், எமது போராட்டத்தை இறுதி வெற்றி வரை நாம் தொடர்ச்சியாக முன்னெடுப்போம் என்றார்.