உள்நாட்டு இறைவரித் திணைக்களத்தின் புதிய நடைமுறைகள்: தெரிந்திருக்க வேண்டிய முக்கிய அம்சங்கள்!


உள்நாட்டு இறைவரித் திணைக்களம் (IRD), 2026ஆம் ஆண்டின் 11ஆம் இலக்க உள்நாட்டு இறைவரி (திருத்தச்) சட்டத்தின் கீழ் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள புதிய வழக்குத் தாக்கல் நடைமுறைகள் குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளித்துள்ளது.

வரி செலுத்துவோர் மீது உடனடியாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படாது என்றும், முதலில் எழுத்து மூலம் அறிவிப்பு வழங்கப்பட்டு, வரி தொடர்பான குறைபாடுகளை சரிசெய்ய 30 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்றும் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அந்த காலக்கெடுவிற்குள் தேவையான நடவடிக்கை எடுக்கத் தவறினால், நீதவான் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யப்படலாம். குற்றம் நிரூபிக்கப்பட்டால் அதிகபட்சமாக ரூ.4 இலட்சம் அபராதம், 6 மாதங்கள் வரை சிறைத்தண்டனை அல்லது இரண்டும் விதிக்கப்படலாம்.

இந்த நடைமுறை பின்வரும் தவறுகளுக்கு பொருந்தும்:
*வரித்துறையில் பதிவு செய்யத் தவறுதல்
*வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்யாமை
*APIT மற்றும் பிடித்தம் செய்யப்பட்ட வரி (Withholding Tax) உள்ளிட்ட ஆண்டு அறிக்கைகளை சமர்ப்பிக்காமை

இந்த சட்ட நடவடிக்கைகள் திட்டமிட்டு வரி ஏய்க்கும் தனிநபர்கள் மற்றும் நிறுவனங்களை இலக்காகக் கொண்டவை என்றும், ஒத்துழைக்கும் வரி செலுத்துவோருக்கு எதிராக பயன்படுத்தப்படமாட்டாது என்றும் IRD வலியுறுத்தியுள்ளது.

மேலும், வரி செலுத்த வேண்டிய பொறுப்பு இல்லாமல் TIN இலக்கம் மட்டும் பெறுபவர்கள் இந்த வழக்குத் தாக்கல் நடைமுறைக்கு உட்படமாட்டார்கள் என்றும், வரி பொறுப்பு இல்லாதவர்கள் தங்களது வரி கோப்பை (Tax File) மூட விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.