மட்டக்களப்பில் விற்பனைக்கான மோட்டார் சைக்கிள்களை ஓடிப்பார்ப்பதாகக் கூறி திருடிய நபர் கைது!


மட்டக்களப்பில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள்களை வாங்குவதாகக் கூறி சோதனை ஓட்டம் மேற்கொள்வதாக நம்பவைத்து திருடிச் சென்றதாகக் கூறப்படும் நபர் ஒருவரை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் இன்று (19) கைது செய்துள்ளனர்.

சத்துருக்கொண்டான் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடமிருந்து திருடப்பட்டதாகக் கூறப்படும் மூன்று மோட்டார் சைக்கிள்களும் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளின்படி, இரண்டு வாரங்களுக்கு முன்னர் காத்தான்குடியில் உள்ள மோட்டார் சைக்கிள் விற்பனை நிலையம் ஒன்றிற்கு சென்ற சந்தேகநபர், மோட்டார் சைக்கிளை வாங்க விருப்பம் இருப்பதாகக் கூறி சோதனை ஓட்டம் மேற்கொள்ள அனுமதி பெற்றுள்ளார். பின்னர், அந்த மோட்டார் சைக்கிளுடன் தப்பிச் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.

அதனைத் தொடர்ந்து, Ikman.lk இணையத்தளத்தில் மோட்டார் சைக்கிளை விற்பனைக்கு விளம்பரப்படுத்தியிருந்த கொக்கட்டிச்சோலை பகுதியைச் சேர்ந்த ஒருவரை தொடர்புகொண்டு, வாகனத்தை வாங்க விருப்பம் இருப்பதாக தெரிவித்து, மட்டக்களப்பு – திருகோணமலை பிரதான வீதியில் உள்ள போக்குவரத்து சமிக்ஞை விளக்குக்கு அருகில் வருமாறு அழைத்துள்ளார்.

அங்கு, அவரது மோட்டார் சைக்கிளை சோதனை ஓட்டம் மேற்கொள்ள வேண்டும் எனக் கூறி, தன்னிடம் இருந்த மற்றொரு மோட்டார் சைக்கிளை அடகாக வழங்கியதுபோல் ஒப்படைத்து, பின்னர் அந்த நபரின் மோட்டார் சைக்கிளையும் எடுத்துச் சென்று தப்பியுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

திருடப்பட்ட மோட்டார் சைக்கிள்களில் ஒன்று வாகரை பகுதியில் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகவும், கைது செய்யப்பட்ட சந்தேகநபர் கடந்த 2023 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற முறையில் மோட்டார் சைக்கிள் ஒன்றை திருடியிருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும், அவர் கடந்த காலங்களில் எட்டு குற்றச்செயல்களுடன் தொடர்புடைய வழக்குகளில் கைது செய்யப்பட்டு நீதிமன்ற பிணையில் இருந்த பழைய குற்றவாளி எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.