இணையவழி ஊடாக பணம் சம்பாதிக்கலாம் எனக் கூறி பண மோசடி செய்த ஒருவர் கைது


 இணையவழி ஊடாக தொழில் செய்து பணம் சம்பாதிக்க முடியும் எனக் கூறி, பண மோசடி செய்த சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவுக்குக் கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இந்த சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இவர் பேஸ்புக் மற்றும் டெலிகிராம் சமூக வலைத்தளங்கள் ஊடாக தொடர்புகளை ஏற்படுத்தி இந்த மோசடியைச் செய்துள்ளமை தெரியவந்துள்ளது.

சந்தேகநபர் 43 இலட்சத்து 86 ஆயிரத்து இருநூற்று பத்தொன்பது ரூபாயை மோசடி செய்துள்ளதுடன், அந்தப் பணத்தில் இருந்து 5 இலட்சம் ரூபாயை முறைகேடாகப் பயன்படுத்தியுள்ளமையும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் பேருவளை பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளில் வடமேல் மாகாண கணினி குற்றப் புலனாய்வுப் பிரிவினர் ஈடுபட்டு வருகின்றனர்.